வடலூர் 155 வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவை முன்னிட்டு ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர் ராமலிங்க அடிகளார். இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.

வள்ளலார், ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க, சத்திய ஞான சபையில் தர்மசாலையை நிறுவினார். அன்று முதல் இன்றுவரை அணையா அடுப்பு எரிந்து பசிப்பிணி நீக்கிவருகிறது.

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 155ஆம் ஆண்டு தைப்பூசப் பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளன்று, சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம்.

பொதுவாக தைமாசம் தவிர்த்த பிற மாத பூசநட்சத்திர தினத்தில் ஆறு திரைகள் மட்டுமே நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். தைப்பூசத்தன்று ஏழு திரைகளையும் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். காலை 6 மணி 10 மணி நண்பகல் ஒரு மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை அதிகாலை ஐந்து முப்பது மணி என ஆறு காலங்களில் ஜோதி தரிசனத்தை காணும் பக்தர்கள் அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணை என கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.

கருப்புத்திரை, நீலத்திரை, பச்சைத்திரை, சிவப்புத்திரை, பொன்மைத்திரை, வெண்மைத்திரை, கலப்புத்திரை ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை ஜோதி தரிசன விழாவை ஒட்டி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 14 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 50 ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள்,ஆயுதப்படை மற்றும் ஊர்க்காவல் படை என 1700 போலீசார் பாதுகாப்பு பணியிலும் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் 100 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள மாமிசம் மற்றும் மதுபான கடைகள் விடுமுறை விடப்பட்டுள்ளது.