தஞ்சாவூர்: மும்முரமாக நடக்குது பணி... மக்கள் தர வேண்டும் ஆதரவு என்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரியமான மண் அடுப்புகள், மண் பானைகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, வீடுகளில் பொங்கல் வைக்க புதுப்பானை, புத்தரிசி வரிசையில் தஞ்சாவூரில் பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும் மண் அடுப்புககளும், பானைகளும் வெகு மும்முரமாக தயாராகி வருகின்றன. தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது பொங்கல் பண்டிகை. தமிழர்களின் பாரம்பரிய விழாவாக தைப்பொங்கல் திருநாள், உழவுக்கும் உணவு உற்பத்திக்கும் உலக உயிரினங்கள் உயிர் வாழ உதவும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையில் மண்பானைகளும், மண் அடுப்புகளும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். புதிய மண்பானை வாங்கி பொட்டு வைத்து பானையின் கழுத்தில் மஞ்சள் கொத்து கட்டி மண் அடுப்பில் ஏற்றி பாரம்பரியம் மாறாமல் மக்கள் பொங்கல் வைப்பார்கள். பானையில் பால் பொங்கும் போது வீட்டில் அனைவரும் ஒன்றாக கூடி பொங்கலோ.. பொங்கல் என கூறும் போது குடும்பத்தின் உற்சாகக்குரல் விண்ணை அதிர செய்யும்.

தொடர்ந்து மாட்டுப்பொங்கல், காணும் பொங்கலிலும் மண்பாண்ட பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இத்தகைய பொங்கல் பண்டிகையினால் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வில் இன்பம் பொங்கும். ஆண்டுக்கு ஒருமுறை மண்பாண்ட தொழிலாளர்கள் முகத்தில் மலர்ச்சி ஏற்படும் என்றால் மிகையில், அவர்களின் வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

பொங்கல் விழாவின் போது தமிழர்கள் தங்களுடைய வீடுகளில் மண்ணாலான புதிய பானைகளை வைத்து, அதில் சர்க்கரை பொங்கலிட்டு படைப்பது வழக்கம். மேலும், வீட்டு வாசலில் பொங்கல் வைப்பதற்கு பெரும்பாலும் புதிய மண் அடுப்புகளையே பயன்படுத்துவர். பொங்கல் பண்டிகைக்கு 2 வாரங்களே உள்ள நிலையில் பொங்கலிட மண்பானைகளுடன் மண் அடுப்புகள் தயாரிப்பதில் தஞ்சாவூர் கீழவாசல், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழில் செய்யும் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். மும்முரமாக தயாராகும் இந்த மண் அடுப்புகள் சூளையில் சுடப்பட்டு, பின்னர் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.

இதுகுறித்து மண் அடுப்புகள் தயாரிக்கும் பணியில் வெகு மும்முரமாக ஈடுபட்டுள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் தரப்பில் கூறியதாவது: ஏரி, குளங்கள், ஆறுகளில் இருந்து எடுக்கப்படும் செம்மண், களிமண், மணல் ஆகியவற்றை வடிகட்டி, சேறு போல் தயாரித்து, சக்கரத்தில் வைத்து, மண் பானை தயாரிக்கப்படுகிறது. பின்னா், உலர வைத்து, நெளிவுகள் மரக்கட்டையால் மெதுவாக தட்டி சரி செய்யப்படுகிறது.

பிறகு, சூளையில் இட்டு, வேக வைத்து விற்பனைக்குத் தயாராகிறது. அரை கிலோ கொள்ளளவு கொண்ட மண் பானை, ரூ. 100க்கும், ஒரு கிலோ, ரூ.150க்கும், இரண்டு கிலோ ரூ.200க்கும் விற்கப்படுகிறது. சிறிய மண் அடுப்பு ரூ.150க்கும், பெரியது ரூ.300க்கும் விற்கப்படுகிறது. மேலும் இங்கு தயாரிக்கப்படும் பானைகள் அரியலூா், பெரம்பலூா், கும்பகோணம், திருச்சி, கடலூா், விருத்தாசலம், சிதம்பரம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், பிற மாவட்டங்களுக்கு மண் பானையை விற்பனை செய்வதற்கு, மண் பானை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம்.

கடந்த மூன்று தலைமுறையாக இத்தொழில் செய்து வருகிறோம். பொங்கல் பண்டிகைக் காலங்களில் மட்டுமே மண்பானை செய்யும் தொழிலில் வருமானம் உள்ளது. பித்தளை, சில்வா் பாத்திரங்கள் வந்தாலும், தற்போது பாரம்பரிய முறையில் மண்பானையில், பொங்கல் வைப்பதில் மக்களுக்கு ஆா்வம் அதிகரித்துள்ளது. பானை தயாரிக்க, மண் எடுத்து வருவது முதல், அதனை சூளையில் வேகவைத்து விற்பனைக்கு அனுப்புவது வரை, ஒரு மாதம் வரை ஆகிறது.

பொங்கலுக்கு ஒரு மாதத்திற்கு முன், பணிகள் தொடங்கப்படும் நிலையில், கடந்த மாதம் பெய்த தொடா் மழை காரணமாக, உற்பத்தி பாதித்தது. பச்சை பானைகள் தயாரித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது சூளையில் வேக வைத்து, விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

நாங்கள் தயாரிக்கும் மண்பானைகள் பொங்கல் பண்டிகை நாள்களில் விற்பனை செய்ய பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்ய எங்களிடம் வாங்கிச் செல்கின்றனா். எங்களிடம் குறைந்த விலைக்கு மண்பானைகளை வாங்கி வெளிச் சந்தையில் அரை கிலோ ஒரு மண் பானையின் விலை ரூ.200 வரைக்கும் விற்பனை செய்கின்றனா். பொங்கல் பண்டிகையில் புதிய மண்பாண்ட அடுப்பில் தான் பொங்கல் வைப்பார்கள். அதற்காக அடுப்புகள் தயாரித்து வருகிறோம். பொதுமக்களும் ஆர்வமுடன் இந்த அடுப்புகளை வாங்குவர். பொங்கலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் மண்பானை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.