தமிழ் பிராமி’ (தமிழி கல்வெட்டுகள்) கல்வெட்டுகளை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி அமைச்சர் ராஜ்மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாங்குளம்

மதுரை மாவட்டம், மாங்குளம் (மீனாட்சிபுரம்) கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இருவகை மலைக் குகைகள் மற்றும் தமிழ் பிராமி (தமிழி கல்வெட்டுகள்) கல்வெட்டுகளை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (18.07.2026) நேரில் பார்வையிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் முக்கியத்துவம் மற்றும் கல்வெட்டுகளின் வரலாற்றுப் பின்னணி: இவ்ஆய்வின் போது தொல்லியல் துறை அதிகாரிகள் மாங்குளம் கல்வெட்டுகளின் வரலாற்றுச் சிறப்புகள் குறித்து மாண்புமிகு அமைச்சருக்கு விரிவாக விளக்கினர்.

சங்க காலப் பாண்டியர் வரலாறு:

இம்மாமலையின் நான்கு குகைகளில் மொத்தம் ஆறு தமிழ் பிராமி (தமிழி கல்வெட்டுகள்) கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. சங்க காலத்தில் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் நெடுஞ்செழியனின் பெயர் முதன்முதலாக இக்கல்வெட்டுகளில்தான் காணப்படுகிறது. இதன் மூலம் இக்கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் (3rd Century B.C.) சேர்ந்தவை என்பது உறுதியாகிறது.

வரலாற்றுச் சான்றுகள்:

மன்னன் நெடுஞ்செழியனின் கீழ் பணிபுரிந்த அதிகாரி கடலன் வழுதி என்பவனும், இளஞ்செழியன் என்னும் உறவினனும் அவன் தந்தை சடிகனும் இம்மலைக்குகையில் நந்தசிறிகுவன் என்ற சமணத் துறவிக்குப் கற்படுக்கைகள் (Monastery Beds) அமைத்துக் கொடுத்துள்ளனர்.

வணிகக் குழுக்களின் பங்களிப்பு:

இதே குகையில் இத்துறவிக்கு 'வெள்ளறை' என்ற வணிக ஊரைச் சேர்ந்த முத்துக் குளிக்கும் வணிகர், 'காவிதி' என்ற பட்டம் பெற்றவருமான அந்தை அசிதன் என்பவரும், நத்தி மற்றும் சந்தரிதன் என்ற துறவிகளுக்கும், 'வெள்ளறை நிகமத்தோர்' என்ற வணிகக் குழுவினரும் கற்படுக்கைகள் செய்து கொடுத்துள்ளனர் என்ற அரிய வரலாற்றுத் தகவல்கள் இக்கல்வெட்டுகளில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் மாண்புமிகு அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் தெரிவித்ததாவது:

தமிழகத்தின் மிகத் தொன்மையான, சங்க காலப் பாண்டிய மன்னர்களின் வரலாற்றைப் பறைசாற்றும் மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டுகள் உலகளவில் போற்றத்தக்க வரலாற்றுப் பொக்கிஷமாகும். இந்தத் தொல்லியல் தளத்தைப் பாதுகாக்கவும், உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆய்வாளர்கள் எளிதில் கண்டு அறியும் வகையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், வழிகாட்டிப் பலகைகளை டிஜிட்டல் முறையில் அமைக்கவும் தொல்லியல் துறை மற்றும் சுற்றுலாத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. துறை சார்ந்த பல்வேறு பொக்கிஷங்களை இன்னும் பேணவும், பாதுகாக்கவும், மேம்படுத்தவும் எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

உலக நாகரிகத்திற்கே ஒரு மிகப்பெரிய தாய்மடி போன்றதாகும்.

கீழடி அகழாய்வு என்பது தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், உலக நாகரிகத்திற்கே ஒரு மிகப்பெரிய தாய்மடி போன்றதாகும். எனவே, அறிவியல் பூர்வமாக, இன்னும் கூடுதல் ஆதாரங்களுடன் முறையான வழிகளில் ஒன்றிய அரசுடன் கலந்து ஆலோசித்து அது நிரூபிக்கப்படவுள்ளது. இதுமட்டுமன்றி, கீழடி போல இன்னும் பல்வேறு இடங்களில் நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சரியான தருணத்தில், நாம் எல்லோரும் பெருமைப்படத்தக்க வகையில் இன்னும் ஒரு மாபெரும் விஷயம் துல்லியமான ஆதாரங்களோடு முறைப்படி விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.