மண்டல தலைவர்கள் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில் மண்டல அலுவலகங்களுக்கு பூட்டு - மண்டல தலைவர்களின் லெட்டர் பேடுகள் பறிமுதல் - மாநகராட்சி ஆணையாளரிடம் அலுவலகங்களின் சாவிகள் ஒப்படைப்பு.

மோடி தொடர்பாக 8 பேர் கைது

மதுரை மாநகராட்சியில் தனியார் கட்டடங்களுக்கான சொத்து வரி நிர்ணயத்தில் குறைப்பு செய்து 150 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் கடந்த வாரத்தில் மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முறைகேடுகள் நடைபெற்ற 5 மண்டல அலுவலகங்களில் தீவிர விசாரணை நடத்தினர். இதில் முதற்கட்டமாக மதுரை மாநகராட்சி 3ஆவது மண்டல தலைவரின் நேர்முக உதவியாளரான தனசேகரன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து உதவி ஆணையாளரின் உதவியாளர் கார்த்திகேயன், இடைத்தரர்களான உசேன், ராஜேஷ், மாநகராட்சி அதிகாரி (ARO) செந்தில்குமரன், ஒய்வு பெற்ற உதவி ஆணையர் ரெங்ராஜன், இடைத்தரகர் முகமது நூர் ஆகிய 8 பேரையும் கைது செய்தனர்.

மண்டல தலைவர்களிடம் இருந்த லெட்டர் பேடுகள்

இதனையடுத்து 150 கோடி ரூபாய் வரிகுறைப்பு முறைகேடு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மண்டலத் தலைவர்கள் வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா மற்றும் சுவிதா ஆகியோர் தங்களின் ராஜினாமா கடிதங்களை வழங்கினர். அதேபோல், நகரமைப்பு நிலைக் குழுத் தலைவர் மூவேந்திரன் மற்றும் வரிவிதிப்பு நிலைக் குழுத் தலைவர் விஜயலட்சுமி ஆகியோரும் ராஜினாமா செய்த நிலையில், மாநகராட்சி ஆணையர் சித்ராவிஜயன் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் ராஜினாமா செய்த மண்டல தலைவர்களுடைய அறைகள் மூடப்பட்டு சாவிகள் மாநகராட்சி ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மண்டல தலைவர்களிடம் இருந்த லெட்டர் பேடுகள் கைப்பற்றப்பட்டதோடு, ஆவணங்களை வெளியில் எடுத்து செல்லாத வகையில் பூட்டுகள் போடப்பட்டு, அறைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மேயருக்கு சம்மன்?

மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் வரை வரி குறைப்பு முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மண்டல தலைவர்களின் ராஜினாமாவும் ஏற்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியிடம், விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாநகராட்சியின் மேயருக்கு தெரியாமல் முறைகேடு நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை. என கருதி குற்றப்பிரிவு காவல்துறையினர் மேயருக்கு சம்மன் அனுப்புவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

மேயருக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா?

இதனிடையே மேயர் இந்திராணியினுடைய நேர்முக உதவியாளராக இருந்த பெண் உதவியாளர், பொன்மணியின் கணவர் ரவி, கம்ப்யூட்டர் ஆபரேட்டராக இருக்கிறார். அவருக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம். என கருதி, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வாய்ப்புள்ளதால், மேயரின் நேர்முக உதவியாளர் பொன்மணி மாற்றம் செய்யப்பட்டு புதிய நேர்முக உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சி.பி.ஐ., விசாரணை தேவை

மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற வரி குறைப்பு மோசடியில் மண்டல தலைவர்கள், அதிகாரிகள் அலுவலர்கள், மாமன்ற உறுப்பினரகள் உள்ளிட்டோர் தொடர்புள்ள நிலையில் மேயருக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்த வெளிப்படையாக விசாரணை நடைபெற வேண்டும். இதனால் சி.பி.ஐ.,க்கு இந்த முறைகேடு விசாரணையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.