தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே அரசகுடியில் கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறப்பிலும் இணைபிரியாத இந்த தம்பதி பற்றி கேள்விப்பட்டு பொதுமக்கள் தங்களின் வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர். இதுதான் உண்மையான மனமொத்த வாழ்க்கை என்றும் தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே நடுக்காவேரி அள்ளூர் அரசகுடியை சேர்ந்தவர் ரெங்கராஜ் (85) இவரது மனைவி மரகதம் (75). இவர்களுக்கு கடந்த 1972 -ல் திருமணம் நடந்தது. திருமணமாகி 53 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ராமகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், துளசிராமன் என்று மூன்று மகன்கள். இதில் ராமகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டார்.

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக ரெங்கராஜ் நேற்று காலை 5.மணியளவில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மனைவி மரகதம் (75 ) கணவன் மீது கொண்ட அன்பினால் அதிர்ச்சியில் இருந்தவர் மதியம் 2 மணியளவில் உயிரிழந்து விட்டார். 53 ஆண்டுகள் வாழ்க்கைப்பயணத்தில் ஒன்றாக பயணம் செய்த இருவரும் சில மணிநேர வித்தியாசத்தில் இறப்பிலும் இணைந்து விட்டனர்.

இதையடுத்து இடுகாட்டில் இருவரது உடல்களையும் அருகருகே வைத்து ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டது. மனம் ஒத்த தம்பதிகள் ஒரே நாளில் இறந்தது அரசகுடி கிராமவாசிகளை ஆழாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மனமொத்த வாழ்க்கை வாழ்ந்ததால்தான் தன் கணவர் இறந்த துக்கத்தில் மனைவி மரகதமும் சில மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார். இதுதான் உண்மையான காதல், பாசம், அன்பு. அருமையான வாழ்க்கை வாழ்ந்துள்ளதற்கு சாட்சி என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

கும்பகோணம் அருகே ஆசிரியையிடம் நகை பறிப்பு

கும்பகோணம் அருகே கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டுக் கதவை தட்டி ஆசிரியையிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் செந்தமிழ்ச் செல்வி (43). இவர் விளாத்தொட்டி பகுதியில் தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு இவரது வீட்டுக் கதவை மர்ம நபர்கள் தட்டி உள்ளனர்.

கதவை திறந்து பார்த்த செந்தமிழ்ச்செல்வியிடம் முகமூடி அணிந்த 7 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி, 6 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.