மேற்காசிய போர் காரணமாக இந்திய மக்கள் சிக்கனமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் ஈரான் - இஸ்ரேல்- அமெரிக்கா இடையேயான போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது. பெட்ரோல், டீசல் கையிருப்பில் இருந்தாலும் நிலைமை எப்போதும் மோசமாக மாறலாம் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனிடையே மக்கள் சிரமத்தை சந்திக்காத வகையில் நிலைமையை சரி செய்ய தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இப்படியான நிலையில் செகந்திராபாத்தில் உள்ள பரேட் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி அந்நியச் செலாவணிக் கையிருப்பைச் சேமிப்பதற்காக மக்களுக்கு சில வேண்டுகோளை வைத்தார். அதாவது, தேசபக்தி என்பது எல்லையில் ஒருவரின் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பது மட்டுமல்ல. இந்தக் காலகட்டத்தில், அது பொறுப்புடன் வாழ்வதும், நமது அன்றாட வாழ்வில் தேசத்திற்கான கடமைகளை நிறைவேற்றுவதுமாகும் என கூறினார்.

<iframe title="TN Assembly OPS | சட்டசபையில் CM விஜய்! கையெடுத்து கும்பிட்ட OPS! விஜய் கொடுத்த ரியாக்‌ஷன் | Vijay" src="https://www.youtube.com/embed/qhTop2xxXLQ" width="805" height="453" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

நிலைமையை சமாளிக்க மெட்ரோ மற்றும் பொதுப் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். நாட்டின் நலன் கருதி வீட்டிலிருந்து பணிபுரிதல் உள்ளிட்ட கோவிட் கால செயல்திறன் நடவடிக்கைகளை மீண்டும் செயல்படுத்த வேண்டும். வெளிநாட்டுப் பயணங்களையும் வெளிநாட்டுத் திருமணங்களையும் தவிர்க்க வேண்டும். ஓராண்டுக்கு அத்தியாவசியமற்ற வகையில் தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இது நாட்டின் பொருளாதார நலனுக்கும் தனிப்பட்ட நலனுக்கும் நன்மை பயக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடியின் இந்த கருத்து மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்று மோடி அவர்கள் மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தங்கம் வாங்க வேண்டாம், வெளிநாடு செல்ல வேண்டாம், பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க வேண்டும், உரம் மற்றும் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க வேண்டும், மெட்ரோவில் பயணம் செய்ய வேண்டும், வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் என்கிறார்.

இது அறிவுரை அல்ல. இது தோல்வியின் சான்று. 12 ஆண்டுகளில் நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்; மக்கள் என்ன வாங்க வேண்டும், என்ன வாங்கக்கூடாது, எங்கே செல்ல வேண்டும், எங்கே செல்லக்கூடாது என்று சொல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.ஒவ்வொரு முறையும் பொறுப்பை மக்கள் மீது தள்ளி வைத்து, தங்களது பொறுப்பிலிருந்து தப்பிக்கிறார்கள். நாட்டை நடத்துவது என்பது இப்போது சமரசம் செய்யும் பிரதமரின் திறனை கடந்துவிட்டது” என விளாசியுள்ளார்.