தஞ்சாவூர்: கர்நாடக முதல்வரை தமிழக முதல்வர் நேரில் சந்தித்து காவிரி நீர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது தமிழக மக்களையும், டெல்டா விவசாயிகளையும் ஏமாற்றும் நாடகமாகும். அதற்கு பதிலாக காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மற்றும் நீதிபதிகள் அடங்கிய குழுவினர் முன்னிலையில் இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எஸ். முகமது இப்ராஹிம் கூறியதாவது:

விவசாய உற்பத்திச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,500 மற்றும் நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 கொள்முதல் விலையாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் நெல் கொள்முதல் பருவத்தை செப்டம்பர் மாதத்திலேயே தொடங்கி, புதிய விலையின் அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், சேமிப்பு கிடங்குகளை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி அனைத்து பயிர் கடன்கள் மற்றும் நகைக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்வரை தமிழக முதல்வர் நேரில் சந்திப்பது என்பது தமிழக மக்களையும், டெல்டா விவசாயிகளையும் ஏமாற்றும் நாடகமாகும். அதற்கு பதிலாக, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மற்றும் நீதிபதிகள் அடங்கிய குழுவினர் முன்னிலையில் இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு மத்திய அரசும், காவிரி மேலாண்மை ஆணையமும் எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது. தமிழகத்திற்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்து விட வேண்டும்.

இந்த ஆண்டு குறுவை சாகுபடி சுமார் 50 சதவீதம் மட்டுமே நடைபெற்றுள்ளது. தற்போது நிலவும் கடும் வெப்பம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களும் காய்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. சம்பா சாகுபடிக்கும் போதிய தண்ணீர் கிடைப்பது சாத்தியமற்ற சூழல் நிலவுவதால், காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.

நெல் சாகுபடிக்கு மாற்றாக டெல்டா மாவட்டங்களில் வாழை, வெற்றிலை, கரும்பு உள்ளிட்ட மாற்றுப் பயிர்களை ஊக்குவிக்கும் வகையில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, அந்த விளைபொருட்களுக்கு நிலையான சந்தை வாய்ப்புகளையும் உருவாக்கித் தர வேண்டும்.

தற்போது செயல்படுத்தப்படும் பயிர் காப்பீட்டு திட்டங்களால் தனியார் காப்பீட்டு நிறுவனங்களே அதிகளவில் பலன் அடைந்து வருகின்றன. எனவே, பயிர் காப்பீட்டு திட்டத்தை முழுமையாக அரசே ஏற்று செயல்படுத்த வேண்டும் . இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக கூட்டத்திற்கு வந்த அனைவரையும் மாநில நிர்வாகி மகேஷ்வரன் வரவேற்றார். மாநில செயலாளர் கருணாநிதி, பொருளாளர் கிருஷ்ணன், செயலாளர் பவுல்ராஜ், துணைத்தலைவர் ஜெயக்குமார், மாநில மகளிரணி செயலாளர் மஞ்சுளா, மாநில அமைப்பாளர் முகமது சபீக் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அரியலூர் மாவட்ட பொருளாளர் தனஞ்ஜெயன் நன்றி கூறினார்.