திருநறையூரில் அவல நிலையில் பயணிகள் நிழற்குடை: போஸ்டர் ஒட்டும் இடமாக மாறிய பொதுச்சொத்து!

2 months ago 5
ARTICLE AD

திருவிடைமருதூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா நாச்சியார் கோவில் மெயின் ரோடு திருநறையூர் ஊராட்சிக்குட்பட்ட வண்டிப்பேட்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ள பயணிகள் நிழற்குடை, போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து, தற்போது தனியார் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டும் இடமாக மாறியுள்ளது. மிகவும் சுகாதாரமற்ற நிலையில் இந்த பயணிகள் நிழற்குடை மாறிவிட்டது.

பொதுமக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட இந்த நிழற்குடையை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வண்டிப்பேட்டை மெயின் ரோடு, திருநறையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. தினமும் ஏராளமான பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் இந்த வழியாக சென்று வருகின்றனர். இதனால், பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் வகையில் இப்பகுதியில் நிழற்குடை அமைக்கப்பட்டது.

கடந்த 2011–2012-ம் நிதியாண்டில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் இந்த நிழற்குடை கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுச்சொத்து, தொடர்ந்து பராமரிக்கப்படாததால் தற்போது பயன்படுத்த முடியாத அளவுக்கு உருக்குலைந்து காணப்படுகிறது.

நிழற்குடையின் தூண்கள், உட்புறச் சுவர்கள் மற்றும் வெளிப்புறப் பகுதிகள் முழுவதும் தனியார் நிறுவன விளம்பரங்கள், கடன் உதவி அறிவிப்புகள், ஆள் தேவை விளம்பரங்கள் உள்ளிட்ட பல்வேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சில போஸ்டர்கள் கிழிந்து தொங்குவதுடன், சுவர்களும் அலங்கோலமாக காட்சியளிக்கின்றன.

இதனுடன் நிழற்குடையின் சுற்றுப்பகுதியில் செடி, கொடிகள் மண்டியுள்ளதால் சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதுடன், முறையான தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படாததால் துர்நாற்றமும் வீசுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களில் போதிய பராமரிப்பின்றி காணப்படும் இந்த இடத்தை பயன்படுத்தவே பயணிகள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெயிலிலும் மழையிலும் பயணிகள் அவதி

நிழற்குடை இருந்தும் அதை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் சுட்டெரிக்கும் வெயிலிலும், மழையிலும் சாலையோரத்தில் நிற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக முதியவர்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால், ஊராட்சி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, நிழற்குடையில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து சுவரொட்டிகளையும் அகற்றி, சுற்றுப்பகுதியில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து, சுவர்களுக்கு புதிதாக வண்ணம் பூசி, பயணிகள் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் நிழற்குடையை புதுப்பிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பொதுச்சொத்துகளில் சட்டவிரோதமாக சுவரொட்டிகள் ஒட்டுவோர் மற்றும் அதற்கு காரணமான நிறுவனங்கள் மீது அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் மீண்டும் போஸ்டர்கள் ஒட்டப்படுவதைத் தடுக்க “இங்கு போஸ்டர் ஒட்டக்கூடாது” என்ற எச்சரிக்கைப் பலகை அமைத்து, தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட நிழற்குடை, மக்களுக்குப் பயன்பட வேண்டிய இடத்தில் போஸ்டர்களுக்கான சுவராக மாறியுள்ளது. மாவட்ட நிர்வாகம் இனியும் தாமதிக்காமல் நடவடிக்கை எடுத்து, திருநறையூர் பயணிகள் நிழற்குடையை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Read Entire Article