திருச்சி: விமான சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்தி ஏஏஐ அதிரடி நடவடிக்கை மேற்ொண்டுள்ளது.

தமிழ்நாட்டின் முக்கிய வான்வழிப் போக்குவரத்து மையங்களில் ஒன்றாகவும், சென்னைக்கு அடுத்தபடியாக அதிக சர்வதேசப் பயணிகளைக் கையாளும் இரண்டாவது பெரிய விமான நிலையமாகவும் திகழ்கிறது திருச்சி சர்வதேச விமான நிலையம். தென் கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கு தினமும் ஏராளமான சர்வதேச விமானங்கள் திருச்சியிலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வரவிருக்கும் மழைக்காலத்தில் விமான சேவைகள் எவ்வித தடையுமின்றி பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு, புதிய உள்கட்டமைப்புத் திட்டத்தை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) முடுக்கிவிட்டுள்ளது.

பொதுவாகப் பருவமழைக் காலத்தில் திருச்சி விமான நிலையத்தின் இயக்கப் பகுதியில் (Airside Area) மழைநீர் தேங்குவது பெரும் சவாலாக இருந்து வந்தது. குறிப்பாக, ஓடுதளப் பாதையை (Runway) அடுத்துள்ள இணை டாக்ஸி பாதை (Parallel Taxi Track - PTT-F) மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட ஏப்ரன் (Apron - விமானங்கள் நிறுத்தும் பகுதி) ஆகிய பகுதிகளுக்கு இடையே பெருமளவில் தண்ணீர் தேங்கியது.

இதனால் விமானப் போக்குவரத்தில் தாமதம் ஏற்படுவதுடன், விமான நிலையத்தின் முக்கிய உள்கட்டமைப்புகளும் சேதமடையும் அபாயம் நிலவியது. இந்த நீர் தேங்கும் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், ₹9.21 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மழைநீர் வடிகால் கட்டமைப்புப் பணிகள் தற்போது அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் விமான நிலைய வளாகத்திற்குள் மேற்கொள்ளப்பட்டு வரும் முதன்மைப் பணிகள் வருமாறு:

மழைநீர் எவ்விதத் தேக்கமுமின்றி உடனடியாக வெளியேறும் வகையில், நீண்டகால உழைப்பைத் தரக்கூடிய நவீன ஆர்.சி.சி வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கனமழை பெய்யும் நேரங்களில் சேகரிப்பாகும் அதிகப்படியான உபரி நீரை, விமான நிலைய எல்லைக்கு வெளியே தடையின்றி விரைவாகக் கொண்டு செல்ல வலுவான கான்கிரீட் பெட்டி வடிவிலான மதகுகள் கட்டப்படுகின்றன. சீரான நீர் ஓட்டத்தை ஏற்படுத்துவதன் மூலம், இயக்கப் பகுதிகளில் மண் அரிப்பு ஏற்படுவது முற்றிலுமாகத் தடுக்கப்படும். அதேபோல் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள உள்ளூர் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்வது தவிர்க்கப்படும்.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய இயக்குநர் ஜி. கோபாலகிருஷ்ணன் தெரிவிக்கையில், "இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் போது மழைநீர் தேங்குவது முற்றிலும் தவிர்க்கப்படும். கனமழை காலங்களிலும் எவ்விதத் தடங்கலுமின்றி விமானங்கள் பாதுகாப்பாக இயங்க இது வழிவகுக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். இப்பணிகள் அனைத்தும் அடுத்த 5 மாதங்களுக்குள் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி விமான நிலையம் கடந்த 10 ஆண்டுகளில் அடைந்துள்ள வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள் வியப்பளிக்கும் வகையில் அமைந்துள்ளன. 2014-15 நிதியாண்டில் 9,694 ஆக இருந்த மொத்த விமானங்களின் இயக்கம், 2025-26 நிதியாண்டில் 18,858 ஆக உயர்ந்து 100% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சர்வதேச விமானங்களின் இயக்கம் 7,778-லிருந்து 9,386 ஆக அதிகரித்து 21% வளர்ச்சி கண்டுள்ளது. உள்நாட்டு விமானங்களின் இயக்கம் 1,916-லிருந்து 9,472 ஆக உயர்ந்து 394% என்ற பிரம்மாண்டமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

தற்போது திருச்சியிலிருந்து கொழும்பு, சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய் மற்றும் அபுதாபி ஆகிய சர்வதேச நகரங்களுக்குப் பல்வேறு முன்னணி விமான நிறுவனங்கள் சேவைகளை வழங்கி வருகின்றன. அதேபோல், உள்நாட்டுப் பிரிவில் சென்னை, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய பெருநகரங்களுக்கும் தொடர்ச்சியான விமானங்கள் இயக்கப்படுகின்றன.

அதிவேகமாக அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கை மற்றும் விமானப் போக்குவரத்துக்கு ஏற்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியமாகிறது. அந்த வகையில், ₹9.21 கோடியில் மேற்கொள்ளப்படும் இந்த வடிகால் சீரமைப்பு திட்டம் சர்வதேசத் தரத்திலான பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் என்பதில் சந்தேகமில்லை.