Chennai RRTS Train: "சென்னை- செங்கல்பட்டு - திண்டிவனம்- விழுப்புரம் இடையே மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஆர்.ஆர்.டி.எஸ் ரயில், பாதை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் தயாரிக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது"

நெரிசலால் சிக்கி தவிக்கும் சென்னை

தமிழ்நாட்டின் தலைநகரமாக இருக்கக்கூடிய சென்னை அதிகளவு வேலை வாய்ப்புகளை, உருவாக்கக்கூடிய நகரமாக இருந்து வருகிறது. அதுபோக சென்னையில்தான் அதிக அளவு தொழில் நிறுவனங்கள், முக்கிய அலுவலகங்கள் என அனைத்தும் அமைந்திருக்கின்றன. எனவே, சென்னைக்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதேபோன்று தினமும் வேலை நிமித்தமாக சென்னைக்கு வந்து செல்பவர்களும், பல ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர்.

குறிப்பாக சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர் மற்றும் திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தினமும் பேருந்து மற்றும் ரயில் மூலமாக சென்னைக்கு பணிநிமிர்த்தமாக செல்கின்றனர். எனவே சென்னைக்கு அதிவிரைவு போக்குவரத்து சேவை என்பது, காலத்தின் கட்டாயமாக மாறி உள்ளது.

போக்குவரத்தும் பொருளாதார வளர்ச்சியும்

சென்னை போன்ற நகரங்களுக்கு அதிவிரைவு பொது போக்குவரத்து, சேவையை அதிகரிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. அவ்வாறு, அதிவிரைவு போக்குவரத்து சேவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும்போது, மக்களின் பயணம் நேரம் வெகுவாக குறையும். இதனால் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே பல தரப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும் மற்றும் பொருளாதாரத்தை மையமாக வைத்து தமிழக அரசு, மண்டல விரைவு போக்குவரத்து சேவை (RRTS) பயன்பாட்டிற்கு வரும் என கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்திருந்தது.

சென்னை-செங்கல்பட்டு-திண்டிவனம்-விழுப்புரம் ரயில் சேவை: Chennai-Chengalpattu-Tindivanam- Villupuram RRTS TRAIN

சென்னையில் இருந்து திண்டிவனம் நகர் பகுதி வரை, மண்டல விரைவு போக்குவரத்து (RRTS TRAIN) ரயில் பாதைகளை அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சுமார் 140 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த ரயில் பாதை அமைக்கப்படும் என பட்ஜெட் கூட்டத்தொடரில், அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சென்னை புறநகர் பகுதிகளை இணைக்க கூடிய வகையில், இந்த ரயில் சேவை செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாம்பரம் பகுதியில் இருந்து இந்த ரயில் சேவை துவங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம் வழியாக விழுப்புரம் வரை செல்லும்.

10 முதல் 15 இடங்கள் வரை ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சராசரியாக 160-கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் ரயில் சேவை இயக்கப்படும். இதன் மூலம் தாம்பரத்திலிருந்து திண்டிவனத்திற்கு, 45 நிமிடம், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு 15 நிமிடம், விழுப்புரத்திற்கு 1 மணி நேரத்தில் செல்ல முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னல் வேகத்தில் நடைபெறும் பணிகள்

இந்த திட்டம் குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 14-ஆம் தேதி சட்டசபையில் வெளியிடப்பட்டது. ரயில் பாதை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்த டெண்டர் கடந்த மார்ச் மாதம் 26 விடப்பட்டது. சாத்தியக்கூறுகள் தயாரிப்பதற்காக (Detailed Feasibility Report-DFR) 6 நிறுவனங்கள் டென்டரில் பங்கேற்றன.

இறுதியாக ஜூலை 3-ஆம் தேதி பாலாஜி ரயில் ரோடு என்ற நிறுவனத்திடம், திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தைப் பொறுத்தவரை அடுத்த கட்ட பணிகளும் வேகமாக நடைபெறும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.