மயிலாடுதுறையில் 1975-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசால் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை அத்துமீறல், அரசியல் சட்டத்துக்கு எதிரான நிலையை விளக்கி, சிறை சென்ற போராளிகளுக்கு பாராட்டு மற்றும் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்துகொண்டு உரையாற்றினார்.

செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: இந்தியாவில் போதைபொருள் அதிகமாக உபயோகிக்கும் மாநிலமாக பஞ்சாப் இருந்தது, ஆனால் இன்று அது மாறி தற்போது தமிழகம் முதலிடமாக உள்ளது. போதைப்பொருளுக்கான செயல்படக்கூடியவர்கள் சென்டரல் ஸ்கூல், சிபிஎஸ்சி பள்ளி பயிலும் மற்றும் கலெக்டர், காவல்துறை அதிகாரிகள், டாக்டர், பொறியாளர் போன்றவர்களின் குழந்தை பயிலும் பள்ளிகளில் மாணவர்களை குறிவைத்து போதை பொட்டலங்களை கொடுக்கின்றனர். தமிழகத்தின் அடுத்த தலைமுறை காப்பாற்றப்பட வேண்டுமென்றால், இளைஞர்கள் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் இந்த தீய அரசு தூக்கி எறியப்பட வேண்டும்.

அதிமுகவுடன் இணைந்து செயலாற்றும் பாஜக

கடந்த 7-ஆம் தேதி கோவையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்கள் தொடர்பு இயக்கத்தை தொடங்கியுள்ளார். இதில் பாரதிய ஜனதா கட்சி இணைந்து செயலாற்றுகிறது. எல்லா இடங்களிலும் பாஜக இணைந்து செயல்பட உள்ளது. அனைத்துக்கும் கருணாநிதி பெயரா..? கவிச்க்கரவர்த்தி பிறந்த மயிலாடுதுறைக்கும் கம்பருக்கும் திமுக அரசு இதுவரை என்ன செய்துள்ளது..?தமிழ்மொழியை தூக்கி நிறுத்திய கவிச்க்கரவர்த்தி கம்பரின் பெயரை மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு சூட்ட வேண்டும். இல்லை என்றால், திமுக ஆட்சி தமிழ்விரோத ஆட்சி என்று பாரதிய ஜனதா கட்சி கூறும்.

கோயில் பணத்தை திருடி நடத்தப்பட்ட மாநாடு முத்தமிழ் கடவுள் முருகன் மாநாடு

கோயில் பணத்தை திருடி முத்தமிழ் கடவுள் முருகன் மாநாடு என்று சொல்லி நடத்திய மாநாட்டு இறுதியில் துணை முதல்வர் உதயநிதி பேசும்போது இது ஆன்மீக மாநாடு அல்ல என்று கூறினார். அப்படியெனில் எதற்கு கோயில் பணத்தை எடுத்தார்கள்? அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீதும், இந்து விரோதி உதயநிதிமீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்துக்களை சீண்டிபார்க்க தேவையில்லை. இந்த அரசு வருகின்ற 2026 மே மாதம் 31 இருக்கமாட்டார்கள். மேலும் திமுகவில் உள்ள அனைத்து ஊழல் அமைச்சர்களும் கம்பி எண்ணுவார்கள்.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 6,700 கொலைகள்

கடலூர் மாவட்ட ரயில்விபத்து வேதனை அளிக்கிறது. அந்த விபத்துக்களும் மொழிக்கும் என்ன சம்பந்தம், விபத்திற்கு காரணமானவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த விபத்தில் யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அஜித்குமார் மீது பொய்வழக்கு கொடுத்த நிகிதா என்ன ஆனார்? அவர் எந்த அமைச்சர் வீட்டில் மறைந்து இருக்கிறார்? இந்த தமிழின விரோதி அரசு ஏன் இன்னும் நிகிதாவை கைது செய்யாமல் உள்ளது? தமிழகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 6,700 கொலைகள் நடந்துள்ளது. எந்த ஒருமனிதாபிமான உணர்வு இருக்கிற பொதுமக்கள் இந்த அரசை ஆதரிக்க மாட்டார்கள். தேசிய ஜனநாயக கூட்டணிதான் தமிழக மக்களை காப்பாற்றும் என்றார். உடன் பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில்பாலு, மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் அகோரம் மற்றும் பலர் இருந்தனர்.