தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஆலக்குடி ரயில்வே கேட்டில் இருந்து சித்திரக்குடி செல்லும் பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பள்ளத்தால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டுனர்கள் பெரும் விபத்து அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக இரவு நேரத்தில் இந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.

தஞ்சை மாவட்டம் ஆலக்குடி ரயில்வே கேட்டில் இருந்து சித்திரக்குடி செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது. இதை சீரமைத்து சாலையை புதிதாக போட்டு தர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை அருகே ஆலக்குடி வழியாக கல்விராயன்பேட்டை, புதுகல்விராயன்பேட்டை, சித்திரக்குடி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் பால் வேன், கேஸ் சிலிண்டர் வேன், லாரி உட்பட சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களும் தினமும் நூற்றுக்கணக்கில் சென்று வருகின்றன.

இந்நிலையில் ஆலக்குடி ரயில்வே கேட் பகுதியைத் தாண்டியவுடன் சித்திரக்குடி நோக்கிச் செல்லும் சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக நடுரோட்டிலேயே பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. இந்தப் பாதையானது பள்ளி, கல்லூரி வாகனங்கள், விவசாயிகள் மற்றும் அன்றாடம் வேலைக்குச் செல்லும் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தும் முக்கிய சாலையாகும்.

இந்த சாலையின் வளைவில் சிறிய அளவில் ஏற்பட்டு இருந்த பள்ளம் தற்ோது பெரிய அளவில் மாறி உள்ளது. ஆலக்குடியிலிருந்து சித்திரக்குடிக்கு செல்லும் பாதையில் இடது புறத்தில் சாலையின் நடுவில் உள்ள இந்த பள்ளத்தால் இரவு நேரத்தில் தஞ்சையில் பணியாற்றி விட்டு ஊருக்கு திரும்பவர்கள் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் போன்ற பகுதிகளில் இருந்து இந்த சாலை வழியாக தஞ்சைக்கு புதிதாக செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி விழுந்து காயமடைகின்றனர். சிறிய அளவில் காணப்பட்ட இந்த பள்ளம் தற்போது பெரிய அளவில் மாறி விபத்துக்கு காரணமாக உள்ளது. எதிரில் வாகனங்கள் வரும்போது பள்ளம் இருப்பது தெரியாமல் வருபவர்கள் தடுமாறி விழுகின்றனர்.

எனவே இந்த சாலையை புதிதாக அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், "ஆலக்குடி - சித்திரக்குடி சாலை மிகவும் குறுகலாக உள்ள நிலையில், இப்படி ஒரு பெரிய பள்ளம் இருப்பது உயிரிழப்பு விபத்துக்களுக்கு வழிவகுக்கும். இன்னும் சில நாளில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கி விடும். இதனால் இந்த சாலையில் டிராக்டர்கள் உட்பட விவசாயப்பணிகளுக்காக வாகனங்கள் அதிகம் சென்று வரும். எனவே முன்னதாகவே அதிகாரிகள் பெரிய அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பே, போர்க்கால அடிப்படையில் இந்தப் பள்ளத்தைச் சீரமைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.

இப்பகுதி மக்களின் நலன் கருதி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு சாலையைச் சரிசெய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. முக்கியமாக சாலை வளைவில் திரும்பும் இடத்தில் இந்த பள்ளம் இருக்கிறது. இதனால் இரவு நேரத்தில் எதிரில் வரும் வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கினால் இந்த பள்ளத்தில் தடுமாறி வயலில் விழும் நிலைதான் உள்ளது. இனியும் காலம் தாழ்த்தாமல் இந்த பள்ளத்தை மூடுவது மட்டுமின்றி சாலையை முழுமையாக சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.