தங்கம்(Gold) மற்றும் வெள்ளி(Silver) விலை ஜனவரி 26ஆம் தேதி திங்கள்கிழமை காலையில் கணிசமாக உயர்ந்துள்ளன. காலை 9:55 மணி நிலவரப்படி, சர்வதேச அளவில் முதலீட்டு சந்சையில் நிலவும் அச்ச உணர்வு மற்றும் உள்நாட்டு தேவை ஆகியவை இந்த உயர்வுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. சமீப காலமாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்றைய உயர்வு மிகவும் முக்கியமானதாக உள்ளது.சென்னை புல்லியன் சந்தையில், நகைகளுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ரூ.15,025 என்ற அளவில் வர்த்தகமாகிறது. இது சமீப காலங்களில் ஒரு நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வுகளில் ஒன்றாகும்.

இதேபோல் இன்று சென்னையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.16,391 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சனிக்கிழமை விலையுடன் ஒப்பிடும்போது ரூ.442 உயர்வு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஜனவரி மாதம் மட்டும் 24 கேரட் தங்கம் விலை 18.56%, 22 கேரட் தங்கம் விலை 17.14 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

மேலும் தற்போது மக்கள் மத்தியில் புதிய டிமாண்ட்-ஐ உருவாக்கியுள்ள 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,500 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இந்த 18 கேரட் தங்கம் லைவ் வெயிட் நகைகள் மற்றும் டிசைனர் நகைகளுக்கு ஏற்றதாக இருக்கும் காரணத்தாலும், 18 கேரட் என்பதால் மக்கள் குறைந்த விலையில் வாங்க முடியும் காரணத்தால் மக்கள் அதிகப்படியான விருப்பத்தை காட்டுகின்றனர்.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் உயர்வை பதிவு செய்து வருகிறது. ஜனவரி 17ஆம் தேதி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,280 ஆக இருந்த நிலையில், ஜனவரி 26ஆம் தேதி அது ரூ.15,025 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 24 கேரட் தங்கம் ரூ.14,487 இருந்து ரூ.16,391 ஆக உயர்ந்து, குறுகிய காலத்தில் கணிசமான உயர்வைக் பதிவு செய்துள்ளது. சில நாட்கள் லேசான சரிவுகள் இருந்தாலும், மொத்தமாக பார்க்கும் போது தங்கம் விலை வேகமான உயர்வு பாதையிலேயே பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல் வெள்ளி விலை தங்கத்தின் போக்கை பின்பற்றி உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.375 என்ற அளவில் ரூ.10 உயர்வுடன் வர்த்தகமாகியது. இதன் மூலம் ஒரு கிலோ வெள்ளி ரூ.3.75 லட்சம் என்ற அளவுக்கு உள்ளது.

மேலும் உள்நாட்டில் தங்க விலை உயர்வுக்கு திருமண சீசன் நெருங்குவது முக்கிய காரணம். தென் இந்தியாவின் பல மாநிலங்களில் திருமணங்கள் சீசன் தொடங்க உள்ளதால், சென்னை மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் நகைக்கடைகளில் கூடுதலான வர்த்தகத்தை பெற்று வருகிறது. தங்கம் விலை உயர்ந்தாலும் தேவை தொடர்வதால் விலை உயர்வும் நிற்காமல் உள்ளது.மேலும், இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக பலவீனமடைந்துள்ளது. இந்தியா தங்கத்தை பெரும்பாலும் இறக்குமதி செய்வதால், ரூபாய் வீழ்ச்சி இறக்குமதி செலவை உயர்த்துகிறது.