தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கிராமம் தோறும் பயிர் காப்பீடு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட உள்ளது. மேலும் ஒரு ஏக்கருக்கு ரூ.778 மட்டுமே காப்பீட்டு கட்டணம். இயற்கை பேரிடர் பாதிப்பில் இழப்பீடு பெற பயிர்காப்பீடு அவசியம். கடைசி நேரம் வரை காத்திருக்க வேண்டாம் என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் ரேவதி அறிவுறுத்தி உள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2026-ம் ஆண்டுக்கான காரிப் (குறுவை) பருவ நெல் சாகுபடிக்கு பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டு திட்டத்தில் அதிகளவில் விவசாயிகள் இணையும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பு பிரச்சார வாகனத்தை மாவட்ட கலெக்டர் ரேவதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயிர்காப்பீட்டு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் ரேவதி வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட கலெக்டர் ரேவதி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2026-ஆம் ஆண்டுக்கான காரிப் (குறுவை) பருவ நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த வாகனப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வு வாகனம் தஞ்சாவூர், பூதலூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் மற்றும் அம்மாபேட்டை உள்ளிட்ட வட்டாரங்களில் கிராமம் தோறும் சென்று விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டின் அவசியம் மற்றும் பயன்கள் குறித்து எடுத்துரைக்க உள்ளது.

பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டு திட்டம் என்பது இயற்கை பேரிடர்கள், மழை வெள்ளம், வறட்சி, விதைப்பு தோல்வி, நடவு பாதிப்பு உள்ளிட்ட எதிர்பாராத காரணங்களால் ஏற்படும் மகசூல் இழப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் முக்கிய திட்டமாகும் என்று அவர் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டு காரிப் பருவ குறுவை நெல் சாகுபடிக்காக ஷேமா (KSHEMA) பொது காப்பீட்டு நிறுவனம் மற்றும் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (AICL) ஆகிய நிறுவனங்கள் பயிர்காப்பீட்டு பணியை மேற்கொண்டு வருகின்றன.

குறுவை நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.778 மட்டுமே காப்பீட்டு கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும், கடன் பெறும் விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

கடன் பெறாத விவசாயிகள் பொதுச் சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் வாயிலாக பயிர்காப்பீட்டில் பதிவு செய்து பயன்பெறலாம் என்றும் அவர் கூறினார்.

இயற்கை காரணங்களால் விதைப்பு செய்ய முடியாத நிலை, விதைப்பு அல்லது நடவு தோல்வி, கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்பு போன்ற சூழ்நிலைகளில் பயிர் சேதம் ஏற்பட்டால், பயிர்காப்பீடு செய்த விவசாயிகள் மட்டுமே இழப்பீடு பெற முடியும் என்பதால், அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் ரேவதி அறிவுறுத்தினார்.

விவசாயிகள் பயிர்காப்பீடு செய்யும்போது, கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெறப்படும் அடங்கல் அல்லது விதைப்பு/நடவு சான்றிதழ், ஆதாருடன் இணைக்கப்பட்ட செயல்பாட்டிலுள்ள வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பதிவு விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், கட்டணத்தை செலுத்திய பின்னர் வழங்கப்படும் ரசீதை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பருவம், கிராமம், நில உரிமையாளர் அல்லது சாகுபடியாளர் விவரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

ஜூலை 31 பயிர்காப்பீட்டுக்கான கடைசி தேதி என்பதால், கடைசி நேரம் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே பதிவு செய்து, இறுதி நேர நெரிசல் மற்றும் தொழில்நுட்ப சிரமங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் ரேவதி விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் லட்சுமிகாந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாமுவேல், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் துர்கா உமா மகேஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன், வேளாண்மை உதவி இயக்குநர் கவிதா, பூதலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராதா, தோட்டக்கலை உதவி இயக்குநர் கனிமொழி, திட்டப் பணியாளர்கள், விவசாயிகள் மற்றும் AICL நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.