Cheyyar Sipcot: ஜெர்மனியைச் சேர்ந்த Schwing Stetter நிறுவனம் செய்யாறு சிப்காட்டில் சர்வதேச அளவில் தொழிற்சாலையை அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் ஆயிரம் நபர்களுக்கு வேலைை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு மாநிலத் தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்)

தமிழ்நாட்டில் அரசு சார்பில் தொழில்துறை வளர்ச்சியைத் திட்டமிடுதல், இயக்குதல் மற்றும் மேம்படுத்தும் நோக்குடன் , தமிழ்நாடு மாநிலத் தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) 1971 இல் முதல் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும், 6 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு 40 தொழில் பூங்காக்களின் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 16 மாவட்டங்களில் மொத்தம் சுமார் 45,000 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்காக்கள் அமைந்துள்ளன.

தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், தொழில் பூங்காக்களும் விரிவு படுத்தப்பட்டு வருகின்றன‌. அதேபோன்று ஒவ்வொரு சிப்காட் தொழிற்சாலை பூங்காவிற்கும் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கும் சாலைகள் மிக முக்கிய தேவைகளாக இருந்து வருகிறது.

செய்யாறு சிப்காட் தொழிற்சாலை - Cheyyar Sipcot

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கடந்த 2006 ஆம் ஆண்டு சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கப்பட்டது.‌ இந்த தொழிற்சாலையில் முன்னணி நிறுவனங்கள் இயங்கி வருகின்றனர். இந்த பகுதியில் இயங்கி வரும் சிப்காட் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகின. அதேபோன்று தொழிற்சாலையை சுற்றி பல்வேறு வேலை வாய்ப்புகளும் மறைமுகமாக உருவாக்க தொடங்கின.தொடர்ந்து செய்யாறு சிப்காட் விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், கடந்த 2015 ஆம் ஆண்டு செய்யார் சிப்காட் இரண்டாம் கட்ட விரிவாக்க பணி தொடங்கப்பட்டது . இதன் மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அடுத்து மூன்றாம் கட்டமாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பரப்பளவு 3,174.33 ஏக்கராக அதிகரிக்க உள்ளது. இதற்காக செய்யார் - வந்தவாசி சாலையில் அமைந்துள்ள, மேல்மா பகுதியில் செய்யார் சிப்காட் அமைப்பதற்கான நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சரியான இடம் செய்யாறு

சென்னைக்கு சுமார் 90 கிலோமீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரத்திற்கு 14 கிலோமீட்டர் தொலைவிலும் செய்யாறு தொழில் பூங்கா அமைந்திருப்பதால் , சரக்கு போக்குவரத்திற்கும், திறன் வாய்ந்த ஊழியர்களை ஈர்ப்பதற்கும் ஏதுவான இடமாக மாறியுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் இங்கு தொழிற்சாலை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன.

இதன் அடிப்படையில் செய்யார் சிப்காட் தொழில்துறை பூங்கா பலன்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள 931.015 ஹெக்டேர் தொழிற்பூங்காவின் பகுதி-2இல் அமையுள்ள தொழிற்சாலைகள் குறித்த தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளன.

புதிய தொழிற்சாலை - ஷ்விங் ஸ்டெட்டர்

கட்டுமான உபகரணங்கள் உற்பத்தியில் உலகளாவிய நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த Schwing Stetter நிறுவனம் செய்யாறு சிப்காட்டில் சர்வதேச அளவில் தொழிற்சாலையை அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் ரூபாய் 600 கோடி மதிப்பீட்டில், 52 ஏக்கர் பரப்பளவில் சுமார் 2,47,000 சதுர அடியில் உருவாகும் இந்த தொழிற்சாலை மூலம் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.