3 பேரை மடக்கி பிடித்த போலீசார்

சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இரவு நேரங்களில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தலைமைச் செயலக காலணி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தலைமை செயலக காலணி போலீசார் குன்னூர் நெடுஞ்சாலை பகுதியில் வைத்து மூன்று பேரை மடக்கி பிடித்தனர்.

அவர்களிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் ஓட்டேரி எஸ்.எஸ் புரம் ஏ பிளாக் ஆறாவது தெருவை சேர்ந்த குணசேகரன் ( வயது 45 ) , அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்கின்ற பண்டாரம் ( வயது 29 ) புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த கோகுல் குமார் ( வயது 30 ) என்பது தெரிய வந்தது.

பாஜக - வில் மாவட்ட செயலாளர்

இதில் கோகுல் குமார் மீது ஏற்கனவே மூன்று குற்ற வழக்குகளும் அரவிந்த் மீது மூன்று குற்ற வழக்குகளும் குணசேகரன் மீது ஆறு குற்ற வழக்குகளும் உள்ளது. குணசேகரன் ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேட்டில் ரவுடி பிரிவில் உள்ளார். மேலும் பாரதிய ஜனதா கட்சியில் வடசென்னை மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி மாவட்ட செயலாளராக உள்ளார்.

குணசேகரன் ஓட்டேரி பகுதியில் கஞ்சா விற்னையில் ஈடுபட்டதால் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின்பு ஓட்டேரி ஏரியாவில் இருந்து தலைமை செயலக காலனி ஏரியாவில் தனது கஞ்சா பிசினஸை தொடர்ந்தார். தனது அடியாட்களை வைத்து ஆந்திராவிற்கு சென்று கஞ்சாவை வாங்கி வந்து அதனை சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து ஓட்டேரி , புளியந்தோப்பு ஆகிய பகுதியில் விற்பனை செய்து வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட குணசேகரன், அரவிந்த் , கோகுல் குமார் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த தலைமைச் செயலக காலணி போலீசார் அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஐந்து வயது சிறுமி கடத்தப்பட்ட விவகாரம் - குற்றவாளியை சுற்றி வளைத்த தனிப்படை காவல் துறையினர்

சென்னை மணலி புதுநகர் வடிவுடையம்மன் நகரில் த.வெ.க கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதே பகுதியை சேர்ந்த 5 வயதுடைய சிறுமி உணவு பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியபோது, அதே பகுதியை சேர்ந்த முரளி (வயது 23) என்பவர் அந்த சிறுமியை கடத்தி, தனது வீட்டிற்குள் அழைத்து சென்று மறைத்து வைத்துள்ளார்.

உணவு வாங்க வெளியே சென்ற சிறுமி வீட்டுக்கு வராததால் பெற்றோர் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கும் இல்லை. இதனால் பதட்டம் அடைந்த பெற்றோர் பொதுமக்களுடன் சேர்ந்து பல இடங்களிலும் தேடிப் பார்த்தும் சிறுமி கிடைக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் உள்ளவர்கள் சிறுமியை முரளி அழைத்துச் சென்றதை பார்த்து உள்ளனர்.

இதை அடுத்து பெற்றோர் முரளியின் வீட்டுக்குச் சென்றபோது அங்கு வீட்டினுள் சிறுமி அழுது கொண்டிருந்தார். இது குறித்து முரளியிடம் கேட்ட போது குடிபோதையில் இருந்த அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் தெரிவித்தார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மணலி புது நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல் துறையினர் விசாரணைக்கு சென்ற போது முரளி தலைமறைவாக இருந்தார். காவல் துறையினர் தனிப்படை தேடிய நிலையில் அம்பத்தூரில் வைத்து முரளியை கைது செய்து , சிறுமியை கடத்தி வந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.