சிவகங்கை அருகே வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு.

கல்வெட்டைப் படித்தறிந்தனர்

சிவகங்கை அருகே ஏனாபுரம் புதுப்பட்டி கண்மாய்ப் பகுதியில் கல்வெட்டு இருப்பதாக அக்கிராமத்தில் உள்ள முரளிகிருஷ்ணன் என்ற கல்லூரி மாணவர் கொடுத்த தகவலின்பேரில் சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா, காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி, வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் வேலாயுதராஜா ஆகியோர் களஆய்வு மேற்கொண்டு அக்கல்வெட்டைப் படித்தறிந்தனர், இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நான்கு அடி நீளமும், ஒரு அடி அகலமும் உள்ள இக்கல்வெட்டில் இரு பக்கங்களிலும் சேர்த்து மொத்தம் பத்தொன்பது வரிகளும், மற்றொரு பக்கத்தில், கமண்டலம், சாட்டை, திரிதண்டம் ஆகிய கோட்டுருவங்களும் காணப்படுகின்றன.

கல்வெட்டுவரிகள்.

1. தெய்வ

2. மாவலி

3. வாணாதி

4. ராயர் த

5. ன்மம்

6. இதுக்கு

7. அகிதம்

8. பண்ணி

9. னவன் கெ

10. ங்கைக் க

11. ரையிலே

12. காராம் ப

13. சுவை

14. கொன்ற

15. தோஷ

16. த்திலே

17. போகக்

18. கடவதா

19. கவும்

என்று எழுதப்பெற்றுள்ளது.

இச்செய்தியின் மூலம், இப்பகுதியை ஆட்சி செய்த தெய்வ மாவலி வாணாதிராயர் கொடுத்த நிலக்கொடையைக் கூறுகிறது. இத்தர்மத்திற்கு கேடு செய்பவர்கள் கங்கைக்கரையில் காராம் பசுவைக் கொன்ற தோஷத்தில் போவார்கள் என்ற ஓம்படைக் கிளவியுடன் இக்கல்வெட்டு அமைந்துள்ளது. இக்கல்வெட்டு காணப்படும் இடத்திற்கு அருகில் சூலம் பொறிக்கப்பட்ட ஒரு கல்லும் காணப்படுவதால் ஏதேனும் ஒரு சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட நிலக் கொடையாக இருக்கலாம் என அறிய முடிகிறது. இக்கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இது பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இறந்தகாலம் எடுத்த சுந்தரத் தோளுடையான் மாவலி வாணாதிராயனின் (கி.பி.1515-1533) கல்வெட்டாகவோ அல்லது அவன் பிறகு அவனது தர்மத்தைக் காக்க அவரது வழியினரோ வழங்கியதாக இருக்கலாம் எனக் கருத முடிகிறது. தெய்வ மாவலி வாணாதிராயர் என்ற பெயரில் இங்கு மட்டுமே கல்வெட்டு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறப்புகள்

மாபலிச் சக்கரவர்த்தியின் வழியில் வந்தவர்கள் எனத் தங்களை அழைத்துக் கொண்ட இவர்கள் மாவலி வாணாதிராயர் என்று தம்மைப் பெயரிட்டு அழைத்துக் கொண்டதோடு, பாண்டிய மன்னர்கள் காலத்திலும், விஜயநகர மற்றும் நாயக்கர்கள் காலத்திலும் அழகர்கோயில், காளையார்கோயில், மானாமதுரை ஆகிய பகுதிகளில் குறுநிலத் தலைவர்களாகவும், அதிகாரிகளாகவும் இருந்து வந்துள்ளனர். இவர்களுள் திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலி வாணாதிராயன்,சுந்தரத் தோளுடையான் மாவலி வாணாதிராயன், இறந்தகாலம் எடுத்த சுந்தரத் தோளுடையான் மாவலி வாணாதிராயன் ஆகியோர் கி.பி. பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டுகளில் இப்பகுதியை ஆண்டு வந்துள்ளனர். இவர்களது திருப்பணிக் கல்வெட்டுக்கள் அழகர்கோயில்,காளையார்கோவில், திருப்புல்லாணி, மானாமதுரை, பிராமணக்குறிச்சி ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன என்று தெரிவித்தனர்.