கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் செவ்வாய்க்கிழமை இரவு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் இரவுநேர ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல்-மதுரை சாலையில் வாடிப்பட்டி அருகே இரவு 11 மணியளவில் சோதனைச்சாவடியில் மின்னல் வேகத்தில் ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த காரை அங்கிருந்த போலீசார் நிறுத்த முயன்றபோது, நிற்காமல் வேகமாக சென்றது. இதனையடுத்து அந்த காரை மடக்கிப் பிடிக்க அடுத்துள்ள சோதனை சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அதற்குள் அவர்கள் கொடைரோடு சுங்கச்சாவடியை கடந்து சென்று விட்டனர். பின்னர் திண்டுக்கல் பேகம்பூர் பகுதியிலும், அடுத்து இருந்த நாகல்நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரின் தடுப்பையும் தாண்டி கார் வேகமாக சென்றது.

இதனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார் இதுகுறித்து திண்டுக்கல் காவல் உதவி கண்காணிப்பாளர்(ரூரல்) சிபிராய் சவுந்தர்யனுக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின் பேரில் சாணார்பட்டி காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் சசிகுமார், தலைமைக் காவலர் பிரதீப்குமார் உள்ளிட்ட போலீசார் அந்த காரை பிடிக்க முயன்றனர். போலீசார் தொடர்ந்து தங்களை குறிவைத்து பின்தொடர்வதை தெரிந்த கும்பல் தாங்கள் கடத்தி வந்தவரை வழியிலேயே இறக்கிவிட்டு தாங்கள் தப்பித்தால் போதும் என்ற முடிவுக்கு வந்து மின்னல் வேகத்தில் காரை ஓட்டிச் சென்றனர்.

இந்த சம்பவத்தில் கொசவபட்டியில் போலீசார் அந்த காரை தடுக்க முயன்ற போது அவர்களையும் மோதி தள்ளி விட்டு சென்றது. இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் சசிகுமார் காயமடைந்தார், பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனை தொடர்ந்து வேம்பார்பட்டியில் சாலையோரம் நடந்து வந்த வேம்பார்பட்டியைச் சேர்ந்த ஓட்டல் தொழிலாளி சங்கிலிமணி (வயது 25) என்பவர் மீதும் அந்த கார் மோதி அவரை சுமார் 30 மீட்டர் தூரத்துக்கு சாலையிலேயே இழுத்துச் சென்று தூக்கி வீசியது. இதில் அவரும் படுகாயமடைந்தார்.பின்னர் கோபாலபட்டி பிரிவு பகுதியில் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் உதவியுடன் சாலையின் நடுவில் பேரிகார்டுகள் வரிசையாக வைத்து போலீசார் அந்த காரை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த தடுப்புகளின் மீது மோதி விட்டு சக்கிலியன்கொடை பகுதிக்குள் கார் சென்றது.

கரந்தமலை அடிவாரம் பகுதிக்குள் கார் சென்றபோது பொதுமக்கள் அந்த காரை துரத்தி பிடிக்க முயன்றனர். இதனால் இனிமேல் தாங்கள் தப்பிக்க முடியாது என நினைத்த அவர்கள் காரில் இருந்து கீழே குதிக்க முயன்றனர். ஒருவர் கீழே விழவே மற்றவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்ப முயன்றனர். ஆனால் அதற்குள் பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் அவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து காரிலிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். போலீசாரிடம் சிக்கிய நபர்களிடம் விசாரணை மேற்கொண்டதில்,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 30) என்பவரை கடத்தி வந்தது தெரியவந்தது. கார்த்திகேயனை காரில் 5 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் கடத்தி மதுரை வழியாக திண்டுக்கல் வந்தபோது போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். கைதான திருச்சி ஆல்பாநகரை சேர்ந்த ஆனந்தகுமார் (30), கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த வீரகணேசன் (31). கருமண்டபத்தை சேர்ந்த பசுபதி (30), முத்துக்குமார் (31), சமத்துவபுரத்தை சேர்ந்த கார்த்திக் (30) என தெரியவந்தது. இவர்கள் மீது திருச்சி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும். போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்த காரை சோதனை செய்ததில் அதில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது. காரையும், அந்த ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் எதற்காக வாலிபரை கடத்தி வந்தனர். பணம் பறிக்கும் முயற்சியில் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் துரித முயற்சியால் சுமார் 45 கி.மீ. தூரம் இரவு நேரத்தில் அடுத்தடுத்து காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து, கடத்தல் கும்பலை சினிமா பாணியில் வருவது போல பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.