அரியலூர்: பட்ஜெட் குறித்து முழுமையாக படித்த பின்னரே கருத்து தெரிவிப்பேன். சமூக நீதித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

பட்ஜெட் குறித்த முழுமையான விவரங்களை படித்துப் பார்த்த பின்னரே விரிவான கருத்துகளை தெரிவிக்க முடியும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். அதே நேரத்தில், பட்ஜெட்டில் தற்போது வெளியாகியுள்ள சில அறிவிப்புகள் பாராட்டுக்குரியவையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் தனது அக்கா பானுமதியின் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், பட்ஜெட் தொடர்பாக கருத்துகளை தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அனைத்து அறிவிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்த முழுமையான விவரங்களை படித்துப் பார்த்த பின்னரே விரிவான கருத்துகளை தெரிவிக்க முடியும் என்றார். இருப்பினும், தற்போது வெளியாகியுள்ள சில அறிவிப்புகள் மிகவும் பாராட்டுக்குரியவையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் இதர உபகரணங்களை வைத்துக் கொள்ளக்கூடிய வசதியுள்ள இருசக்கர வாகனங்களை வழங்க அரசு முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது என்று கூறினார்.

மேலும், ‘கலைஞர் கனவு திட்டம்’ என்ற பெயரில் செயல்பட்டு வந்த வீடு கட்டும் திட்டம் தற்போது ‘வெற்றி வீடு திட்டம்’ என்ற பெயரில் மாற்றப்பட்டு, வீடு கட்டுவதற்கான மதிப்பீடு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

வீடு கட்டுவதற்கான மதிப்பீட்டை உயர்த்த வேண்டும் என்று கடந்த ஆட்சிக் காலத்திலேயே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்ததாகவும், தற்போது அந்த மதிப்பீடு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதை பாராட்டி வரவேற்பதாகவும் தொல். திருமாவளவன் கூறினார்.

சமூக நீதித்துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார். பண்டிதர் அயோத்திதாசர் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.419 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இதனை வரவேற்பதாக கூறினார்.

அதேபோல், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடித் திட்டத்துக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். இதுபோன்ற திட்டங்கள் சமூகத்தில் பின்தங்கிய மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவியாக அமையும் என்றும் அவர் கூறினார்.

வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது தற்போது ஒரு மடங்கு கூடுதலாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சமூக நீதித்துறையை சுதந்திரமாக இயங்கச் செய்வதற்கும், அதற்கான நிதியை முழுமையாகச் செலவிடுவதற்கான வாய்ப்பையும் அரசு வழங்கியுள்ளது என்றும், அதன் எதிரொலி பட்ஜெட்டிலும் காணப்படுவதாகவும் தொல். திருமாவளவன் கூறினார்.

சமூக நீதித்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கீடு செய்திருப்பதற்காக முதலமைச்சருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார். தவெக அரசு அமைந்த பின்னர் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. புதிதாக எவ்வித திட்டங்களும் இல்லை என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.