மது அருந்தி, அடிக்கடி தொல்லை

சென்னை கொளத்தூர் பகுதியில் 33 வயது பெண் ஒருவர் கணவரை பிரிந்து தனது தாயார் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இப்பெண் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இப்பெண்ணின் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிக்கும் ராஜேஷ் என்பவர் மனைவியை பிரிந்து தாயார் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

பாலியல் சைகை - கொலை மிரட்டல்

ராஜேஷ் மது அருந்தி விட்டு அடிக்கடி எதிர் வீட்டில் வசிக்கும் பெண்ணை அவதூறாக பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 06.07.2025 அன்று மாலை அப்பெண் , தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது , ராஜேஷ் அப்பெண்ணை அவதூறான வார்த்தைகளால் பேசியும் , பாலியல் சைகை காட்டியும் , கொலை மிரட்டல் விடுத்தும் தொந்தரவு செய்துள்ளார்.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் V-4 இராஜமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. V-4 இராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட ராஜேஷ் ( வயது 38 ) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேஷ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

நாட்டு வெடி குண்டு வீசுவேன் , காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு மிரட்டல் விடுத்த நபர்.

கடந்த 05.07.2025 அன்று மாலை சென்னை பெருநகர காவல் கிழக்கு மண்டல காவல் கட்டுப் பாட்டறையின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய நபர் ஒருவர் சென்னை மயிலாப்பூர் தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து எல்லோரையும் காலி செய்து விடுவதாக கூறி மிரட்டியும் , அவதூறாக பேசியும் இணைப்பை துண்டித்துள்ளார்.

இது குறித்து D-5 மெரினா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
D-5 மெரினா காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் , வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு , வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை சேர்ந்த தவசிலிங்கம் ( வயது 42 ) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தவசிலிங்கம் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.