ஆடி திருவிழாவை முன்னிட்டு சேலம் குகை மாரியம்மன் திருக்கோயில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதில், அமெரிக்க இளைஞர் ஒருவர் பொதுமக்களை ஈர்த்தார்.

சேலத்தில் ஆண்டுக்கு ஒரு முறை 22 நாட்கள் நடக்கும் ஆடித்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கோட்டை மாரியம்மன் திருக்கோயிலை மையமாக வைத்து அதனை சுற்றி உள்ள 18 பட்டி கிராமத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் ஆடித்திருவிழா களைக்கட்ட தொடங்கும். திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா வருவர். இந்த விழாவில் உருளு தண்டம், தீமிதி விழா மற்றும் வண்டி வேடிக்கை பிரசித்தி பெற்றதாக உள்ளது.

அந்த வகையில் சேலம் குகை மாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு வண்டி வேடிக்கை மிகவும் சிறப்பு பெற்றது. இதற்காக 15 நாட்களுக்கு மேலாக கடுமையாக விரதம் மேற்கொண்ட பக்தர்கள் கடவுள் உருவத்தில் வேடம் தரித்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது முக்கிய நிகழ்வாக அமையும். இதன்படி ஆடி திருவிழாவை முன்னிட்டு சேலம் குகை பகுதியில் இருந்து புராண நிகழ்வுகளை உணர்த்தும் வகையில் கடவுள்கள் போல வேடம் தரித்து மின்விளக்குகளால் ஜொலிக்கும் அலங்கார வண்டிகளில் மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். இந்த வண்டி வேடிக்கையை காண சேலம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.

அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் கடவுள் வேடம் தரித்தவர்கள் மக்கள் கூட்டத்தில் வலம் வந்து அவர்களைப் பார்த்து கையை அசைத்து ஆசி வழங்கினர். 15க்கும் மேற்பட்ட வண்டிகளில் சிவன், பார்வதி, முருகன் ஆகிய தெய்வங்களும் மற்றும் புராண நிகழ்வுகளை உணர்த்தும் வகையில் ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளில் வரும் பாத்திரங்களை தத்துருபமாக காட்சிப்படுத்தப்பட்டு பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. குகைப் பகுதியில் இருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பக்தர்களுக்கு ஆசி வழங்கியபடி வந்து மாரியம்மன் கோயிலை சுற்றி வலம் வந்து நிறைவு பெற்றது.

குறிப்பாக, அமெரிக்காவிலிருந்து வருகை தந்த இளைஞர் டோனி கிளார் கூறுகையில், “நான் பல நாடுகள் சுற்றிப் பார்த்துள்ளேன். எந்த ஒரு நாட்டிலும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடந்ததில்லை. தமிழ்நாடு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. சேலம் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. நான் விஜய் ரசிகன், அதனால்தான் விஜய் டீ சர்ட் அணிந்து வந்துள்ளேன். நாளை முதல்வர் விஜயை சந்திக்க சென்னை செல்கிறேன்” என்றார்.