நீரிழிவு நோயர்கள், பிசிஓடி பெண்கள், ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், கல்லீரல் கொழுப்பு நோய் உள்ளவர்கள் இனிப்பு எந்த வகையில் எந்த வடிவில் வந்தாலும் தவிர்ப்பதே நல்லது என்று மருத்துவர் எச்சரித்துள்ளார்.

இதுபற்றி பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா கூறி உள்ளதாவது:

''கிட்டத்தட்ட 800 கோடி மனித நாக்குகளுள் அறுதிப் பெரும்பான்மை நாக்குகள் இனிப்பு எனும் சுவைக்கு அடிமை என்றே கூறலாம். நாக்குகளில் இருக்கும் சுவை அறியும் நரம்பு மொட்டுகள் - இனிப்பெனும் சுவையை உணர்ந்தமட்டில் மூளைக்கு அதைக் கடத்தி விடுகிறது

புகை பிடிப்பவர்களுக்கு "நிகோடின்"

மது அருந்துபவர்களுக்கு "ஆல்கஹால்"

மூளையை எப்படி அடிமையாக்கி வைத்திருக்கிறதோ அதே போன்றுதான் இந்த இனிப்பு சுவையும் மூளையின் ஊக்குவிப்பு மையங்களைத் தூண்டி மீண்டும் மீண்டும் இனிப்பு சுவையை உண்ண வைக்கின்றன.

இன்னும் சொல்லப்போனால் மனிதர்கள் உண்ணும் சர்க்கரை, "ஆபத்தான போதை" வஸ்துவான "கொகய்னுக்கு" நிகராக மூளையைத் தூண்டுகிறது. இதன் காரணமாகத்தான் மனிதர்கள் "பழங்கள்" தங்களுக்கு நன்மையை மட்டுமே தரக்கூடியவை என்று தவறான எண்ணத்தில் இருக்கிறார்கள்.

பழங்களை அவ்வாறு செய்ய முடியாது

மட்டன், சிக்கன், முட்டை மஞ்சள் கரு என்று எதன் மீதும் நீங்கள் எளிதாக கொழுப்பு இருக்கிறது என்ற ஒரு காரணத்தைக் கூறி களங்கம் ஏற்படுத்திட முடியும். இவற்றை மக்களை உண்ணாத அளவு அந்நியமான பொருட்களாக மாற்றிட முடியும். ஆனால் பழங்களை அவ்வாறு செய்ய முடியாது, காரணம் பழங்களில் நிரம்பியுள்ள இனிப்பு சுவை.

தற்காலத்தில் விளைவிக்கப்படும் பழங்களில் - ஃப்ரக்டோஸ் எனும் மாவுச்சத்தை விட சுக்ரோஸ் எனும் மாவுச்சத்து மிக அதிகமாக இருக்கிறது. இந்த சுக்ரோஸ் நமது உடலுக்குள் செல்லும்போது க்ளூகோஸ் மற்றும் ஃப்ரக்டோஸாக பிரிகிறது.

க்ளூகோஸ் - அளவுக்கு மிஞ்சினால் இன்சுலின் சுரப்பைத் தூண்டி நாளடைவில் இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ் நிலையை உருவாக்கி உடல் பருமன் / நீரிழிவு / ரத்தக் கொதிப்பு போன்றவற்றை உருவாக்கலாம்.

நீரிழிவு நோயர்கள்

ரத்தக் கொதிப்பு நோயர்கள்

உடல் பருமன் கொண்டோர்

கல்லீரல் கொழுப்பு படியும் நோய் உடயோர்

பிசிஓடி பெண்கள்

யாவரும் இனிப்பு சுவை மிகுந்த பழங்களை நாள்தோறும் சாப்பிட்டு வருவது அவர்களுக்கு நன்மையை விட தீமையை அதிகரிக்கும்.

இன்னும் பழங்களில் உள்ள ஃப்ரக்டோஸ் என்பது "லிப்போஜெனிக் சுகர்" ஆகும். இந்த ஃப்ரக்டோஸ் கல்லீரலினால் வளர்சிதை மாற்றத்துக்கு உள்ளாகும்போது இறுதியில் உடலில் கொழுப்பு சேரும் அளவுகளைக் கூட்டுகிறது. ட்ரைகிளசரைடு அளவுகளைக் கூட்டுகிறது. கல்லீரலில் கொழுப்புப் படிவதைக் கூட்டுகிறது.

இரும்புச் சத்து என்றவுடனே யாருக்கும் ஈரல் / செவரொட்டி நியாபகம் வர மாட்டேங்குது. ஆனால் பேரீச்சம் பழங்கள் நியாபகம்தான் வருகிறது.

புரதச்சத்து என்றதும் முழு முட்டை / மீன்/ மாமிசம்/ பயறு/ பருப்பு வகைகள் நியாபகம் வர மாட்டேங்குது. ஆனால் இனிப்பு சுவை மிகுந்த புரதச்சத்து ஊட்டச்சத்து பொடிகள்தான் நியாபகம் வருகிறது

வைட்டமின் தேவை என்றால் காய்கறிகள் / முட்டை/ மாமிசம் / கீரை வகைகள் / கடலை/ நட்ஸ் நியாபகம் வர மாட்டேங்குது. ஆனால் இனிப்பு சுவை நிரம்பிய பழங்கள் மட்டுமே நியாபகம் வருகிறது.

இப்படி உணவு சார்ந்து தவறாக ஸ்டீரியோடைப்பிங் செய்து வைக்கப்பட்டுள்ளதால், யூட்யூப் வீடியோக்களைப் பார்த்து ஏபிசி ஜூஸ் தினமும் குடிக்கின்றனர். தினமும் இனிப்பு சேர்த்த பழச்சாறுகளைப் பருகினால் நன்மை நிகழும் என்று நம்புகின்றனர்

சீனிக்கு பதிலாக நாட்டு சர்க்கரை சேர்த்தால் சுகர் நோயை ஏமாற்றி விடலாம் என்றும் அதுவும் வேண்டாம் "கருப்பட்டி" போட்டால் நல்லது என்றும் நம்ப வைக்கப்படுகிறார்கள். இதனால் எத்தனை மாத்திரை போட்டாலும் சுகர் கண்ட்ரோல் கிடைக்கமாட்டேன் என்கிறது...

"பழங்கள்" யாரெல்லாம் சாப்பிடலாம் ? யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

நீரிழிவு நோயர்கள்

பிசிஓடி

ரத்தக் கொதிப்பு

உடல் பருமன்

கல்லீரல் கொழுப்பு நோய் உள்ளவர்கள்

இனிப்பு எந்த வகையில் எந்த வடிவில் வந்தாலும் தவிர்ப்பதே அதை உண்பதை விட நல்லது.

உடல் பருமன் / தொப்பை இல்லாதவர்கள்

நீரிழிவு / நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இல்லாதவர்கள்

இளைஞர்கள் / இளைஞிகள்

குழந்தைகள் / சிறார் சிறுமியர்

பேக்கரி பண்டங்கள்

ஸ்வீட்டுகள்

எண்ணெயில் பொரித்த பண்டங்கள்

ஃபாஸ்ட் ஃபுட் வகைகள் போன்றவற்றை தவிர்த்து விட்டு / குறைத்து விட்டு "பழங்களை" அளவோடு உண்பது சிறந்தது. எனினும் பழங்களைச் சாறாக்கிப் பருகுவது குடிப்பது நல்லதன்று. அதிலும் உடல் பருமனான சிறார் சிறுமியருக்கு அளவுக்கு அதிகமான பழங்கள் / பழச்சாறுகள் நன்மையை விட தீமை தருவதற்கு வாய்ப்பு அதிகம்.

இனிப்பு சுவையைக் கழித்து விட்டால்/ குறைத்து விட்டால் பழங்களின் நுகர்வு நாளுக்குநாள் தானாக குறைந்துவிடும். உண்மையில் மனிதர்கள் பழங்களைத் தேடி உண்பது பருகுவது அதில் இருக்கும் சத்துகளுக்காக மட்டுமன்று அதில் உள்ள போதை தரும் இனிப்பு சுவைக்காகத்தான்.

பழங்களில் வைட்டமின்கள் சத்துகள் உள்ளன எனினும் பழங்களை உண்பதிலும் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து உண்டென்பதையும் அறிக.

பிசிஓடி, உடல் பருமன் உள்ளிட்ட இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ் இருப்பவர்களும் இனிப்பு சுவை கொண்டவற்றைக் குறைப்பது / நிறுத்துவது அவர்களுக்கு நன்மை தரும்.

சிறார் சிறுமியர்களுக்கு

நவீன கால ஸ்நாக்ஸ்களுக்குப் பதிலாக பழங்கள் நல்ல மாற்று.

ஆயினும் பழங்களைச் சாறாக்கிக் கொடுப்பது நல்லதல்ல. அதிலும் மேலும் சீனி உள்ளிட்ட இனிப்பைச் சேர்த்து வழங்குவது தீங்கு விளைவிக்கும்.

தினசரி உணவில் நேரடி சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து/ தானிய நுகர்வைக் குறைத்துக் கொண்டு அதற்கு பதிலாக பழங்கள் சாப்பிடலாம்.

நீரிழிவு நோயரைப் பொருத்தவரை சீனி, நாட்டு சர்க்கரை, வெல்லம் கருப்பட்டி, தேன், இனிப்பான பழங்கள் ஆகிய அனைத்தும் ஒன்றே.

மேற்கூறியவற்றை அவர்கள் நிறுத்துவதால் அவர்களுக்கு நன்மைகள் உண்டாகும்''.

இவ்வாறு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.