“அறிக்கை வெளியானால்தான் விமர்சிக்க முடியும்!” – கீழடி ஆய்வறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா அதிரடி

2 months ago 4
ARTICLE AD

தஞ்சாவூர்: கீழடி அகழாய்வு தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டால்தான், அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் குறித்து விரிவான விமர்சனங்களும், ஆய்வுகளும் மேற்கொள்ள முடியும் என்று இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை இயக்குநரும், கீழடி அகழாய்வு அறிஞருமான அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தின் தொன்மையான வரலாற்றை முழுமையாக வெளிக்கொண்டு வர காவிரிப் படுகை முழுவதும் அறிவியல் அடிப்படையிலான தொடர் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தஞ்சாவூர் திலகர் திடலில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் நடைபெற்ற தமிழ் மக்கள் இசை விழாவில் பங்கேற்ற அவர், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

“எனது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டது”

கீழடி தொடர்பான அகழாய்வுப் பணிகள் முடிவடைந்த பின்னர், அதற்கான அறிக்கையை உரிய முறையில் சமர்ப்பித்துவிட்டேன். அந்த அறிக்கை வெளியிடப்பட்டால் பொதுமக்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதன் மூலம் பல்வேறு கோணங்களில் மேலதிக ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். அந்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

ஒரு அகழாய்வு அறிக்கை என்பது அங்கு கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுவது. கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்ட பின்னரே அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது. எனவே, அறிக்கையை திருத்த வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை.

“விமர்சிக்க ஆயிரம் பேருக்கு உரிமை உண்டு!”

எனது அறிக்கையை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதில் உள்ள கருத்துகள் மற்றும் ஆய்வு முடிவுகளை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். விமர்சிப்பதற்கு ஆயிரம் பேருக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அறிக்கை வெளியிடப்பட்டால்தானே அதை முழுமையாகப் படித்து விமர்சிக்க முடியும்.

“தமிழகத்தில் நகர நாகரிகத்துக்கான ஆதாரங்கள்”

தமிழகத்தில் இருந்து நாகரிகம் தோன்றியதற்கான பல்வேறு ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. இரண்டாம் கட்ட நகர நாகரிகம் கங்கைச் சமவெளியில் மட்டுமே தோன்றியது என்ற கருத்துக்கு மாறாக, அதற்கு முன்பே தமிழகத்தில் நகர நாகரிகம் உருவாகியதற்கான தகவல்கள் அகழாய்வுகள் மூலம் கிடைத்து வருகின்றன.

இரும்பு பயன்பாடு தொடர்பான தொல்லியல் ஆதாரங்களும் முக்கியமானவை. “இரும்பைக் கண்டுபிடித்தவன் தமிழன்” என்ற செய்தி உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுபோன்ற அறிவியல் ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவரும் நிலையில், அவை எதிர்காலத்தில் இந்திய வரலாற்றை மறுபரிசீலனை செய்வதற்கான முக்கிய அடிப்படையாக அமையக்கூடும்.

டி.என்.ஏ. ஆய்வுகளும் முக்கியம்

கீழடி தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அண்மையில் டி.என்.ஏ. ஆய்வை மேற்கொண்டுள்ளது. இதுபோன்று தொல்லியல் ஆய்வுகளுடன் இணைந்து அறிவியல் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்போதுதான் வலுவான ஆதாரங்களைப் பெற முடியும்.

இதன் மூலம் தமிழகத்தின் தொன்மையான வரலாற்றை வெறும் கருத்துகளின் அடிப்படையில் அல்லாமல், அறிவியல் ஆதாரங்களுடன் உறுதியாக எடுத்துரைப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

காவிரிப் படுகையில் அகழாய்வு அவசியம்

சோழர்களின் வரலாற்றை நாம் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. இதுவரை பெரும்பாலும் கல்வெட்டுகளின் அடிப்படையிலேயே சோழர்களைப் பற்றிய தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன. மாளிகைமேடு போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காவிரிப் படுகையில் விரிவான அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இப்பகுதியில் உள்ள ஒவ்வொரு பழமையான கிராமத்திலும் காலப்போக்கில் மண் அடுக்குகள் தொடர்ந்து படிந்துள்ளன. அந்த மண் அடுக்குகளுக்கு அடியில் ஆழமாகச் சென்று ஆய்வு செய்தால்தான் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான குடியிருப்புகள், தொழில், வணிகம் மற்றும் பண்பாடு தொடர்பான பல்வேறு ஆதாரங்கள் கிடைக்கும்.

காவிரிப் படுகை முழுவதும் திட்டமிட்டு அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டால், தமிழகத்தின் வரலாற்றுத் தொன்மையை மேலும் ஆழமாக வெளிக்கொண்டு வர முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வரங்கம், கலை நிகழ்ச்சிகள்

முன்னதாக நடைபெற்ற ஆய்வரங்கம் மற்றும் கருத்தரங்கில் “கீழடி நாகரிகத்தை உயர்த்திப்பிடி, வேத நாகரிகத்தை துரத்தியடி” என்ற தலைப்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியர் வெ. மாரப்பன், தமிழக மக்கள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் பொழிலன், புதிய குரல் நிறுவனர் ஓவியா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலர் களப்பிரன், திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் உள்ளிட்டோர் பேசினர். விழாவில் தப்பாட்டம், நையாண்டி, தெருக்கூத்து உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Read Entire Article