காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள வல்லக்கோட்டை முருகன் கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழமையான கோவில் என நம்பப்படுகிறது. இந்த கோவிலுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமில்லாமல், சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் முருகரை தரிசிக்க வந்து செல்வது வழக்கமாக உள்ளது.

இந்தியாவிலே உயரமான மூலவர் சிலை

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பிரம்மாண்டமே, 7 அடி உயரம் கொண்ட முருகனின் திருவுருவம் தான். இந்தியாவில் உள்ள உயரமான மூலவர் முருகர் சிலையில் ஒன்றாக இந்த சிலை இருந்து வருகிறது. மூலவர் கோடை ஆண்டவர் என்ற பெயரில் வள்ளி, தெய்வானையுடன் கிழக்கு நோக்கியபடி காட்சி தருகிறார்.

காஞ்சிபுரம் வல்லக்கோட்டை முருகன் கோயில் தல வரலாறு என்ன ? Vallakottai Murugan Temple History

புராண காலத்தில் இலஞ்சி என்னும் தேசத்தை பகீரதன் என்ற மன்னன் ஆட்சி புரிந்து வந்துள்ளார். பகீரதன் ஒருமுறை தனது ஆணவத்தின் வெளிப்பாடாக, நாரதரை அவமானம் செய்துள்ளார்.

மன்னனின் செயலால் கோபமடைந்த நாரதர் அருகில் உள்ள காட்டிற்குச் சென்றார். அங்கு பல நாடுகளை வென்று வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்த கோரன் என்ற அசுரனைச் சந்தித்தார். தன்னை அவமானம் செய்த மன்னரை பழிவாங்க முடிவு செய்த நாரதர், பகீரதன் என்ற அரசனை வென்றால் மட்டுமே உனது திக்விஜயம் முழுமையடையும் என கூறினார்.

கோரன் பகீரத மன்னருக்கு இடையே நடந்த போர்

கோரன் பகீரத மன்னன் மீது போர் தொடுத்து அவனைத் வென்றான். இதனால் நாட்டையும் செல்வத்தையும் இழந்த மன்னர் காட்டுக்குத் துரத்தப்பட்டார். தனது தவறை உணர்ந்த மன்னர், நாரதர் இடம் மன்னிப்பு கேட்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என ஆலோசனையில் ஈடுபட்டார். நாரதரின் ஆலோசனையில் அடிப்படையில் துர்வாசக முனிவரை சந்தித்தார்.

துர்வாச முனிவரின் உபதேசப்படி, பகீரதன் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டான். அப்படி அவர் வழிபட்ட இடம் தான் வல்லக்கோட்டை என நம்பப்படுகிறது. இதனை தொடர்ந்து மன்னர் முருக பெருமான் அருளால், தான் இழந்த அனைத்து செல்வத்தையும் நாட்டையும் மீண்டும் பெற்று இருக்கிறார்.

வல்லக்கோட்டை பெயர் காரணம் என்ன ?

இங்கு இருக்கும் முருகனை வணங்கி விரதம் இருந்து வழிபட்டு வந்தால், அனைத்து வளங்களையும் பெறுவதற்கான வல்லமையை முருகன் தருவார் என்பதற்காக, வல்லக்கோட்டை முருகன் என பெயர் வந்ததாக கூறுகின்றனர்.

செல்வத்தை மீட்டுக் கொடுக்கும் முருகன்

தல புராண கதையின் அடிப்படையில், இழந்த செல்வம் திரும்ப கிடைக்க வேண்டும் என்றால் தொடர்ந்து, 7 வெள்ளிக்கிழமைகள் விரதம் இருந்து, வழிபட்டு வந்தால் நினைத்ததை நிறைவேறும் என பக்தர்கள் நம்புகின்றனர். செல்வத்தை மீட்டெடுக்க வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பது ஐதிகமாக இருக்கிறது.

வல்லக்கோட்டை கோயில் கும்பாபிஷேகம் - Vallakottai Murugan Temple Kumbabishekam

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெறுகிறது. 2008- ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போது கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பாபிஷேகம் என்பதால் பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 60 ஏக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 108 சிவாச்சாரியார்களும், 9 ஓதுவார்களும், இணைந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.