புதுச்சேரி: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சி மாநாட்டு பணியில் ஈடுபட்டு வீடு திரும்பிய புதுச்சேரி தமிழக வெற்றிக்கழக மாநிலச் செயலாளர் சரவணன் (47) திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.

மாரடைப்பால் உயிரிழந்த மாநிலச் செயலாளர்

தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன் (47). இவர் புதுச்சேரி சித்தன்குடி பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி தேவி மற்றும் மகன் உள்ளனர். கல்லூரியில் படிக்கும் காலம் தொட்டே நடிகர் விஜயின் தீவிர ரசிகரான உள்ளார். சரவணன் ரசிகர் மன்ற முன்னோடியாக இருந்து வந்துள்ளார். தற்போது நடிகர் விஜய் கட்சி தொடங்கிய நிலையில், அதன் புதுச்சேரி மாநிலச் செயலாளராகவும், அதன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு மிக நெருக்கமானவராக திகழ்ந்து வந்தார். வரும் 27ம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெறும் மாநாட்டு வேலைகளில் அவர் தீவிர கவனம் செலுத்தி வந்துள்ளார்.

சோகத்தில் மூழ்கிய தமிழக வெற்றிக் கழகத்தினர்

பல நாட்களாக விக்கிரவாண்டியில் தங்கி மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவர் புதுச்சேரி திரும்பிய அவருக்கு நேற்று மாலை வீட்டில் இருந்த போது லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், குடும்பத்தினர் அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். அதையடுத்து சரவணன் உடல் புதுச்சேரி, சித்தன்குடியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அறிந்து அவரது கட்சி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆறுதல் கூறிய விஜய்

உயிரிழந்த தவெக புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன் குடும்பத்திற்கு, விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். அப்போது செல்போனில் பேசிய விஜய்-யிடம் சரவணனின் மனைவி கதறி அழுதார். ஓரிரு நாளில் நேரில் வந்து சந்திப்பதாக விஜய் உறுதி அளித்துள்ளார்.

மாரடைப்பு

இதயத்தின் பகுதிகளுக்குக் குருதியோட்டம் தடைப்படும்போது இதயத்திசு இறப்பு அல்லது இதயத்தசை இறப்பு (myocardial infarction) ஏற்படுகிறது. இது பெரும்பாலும் முடியுருத் தமனியில் தடையோ குறுக்கமோ ஏற்படுவதால் உண்டாகிறது. இத் தமனிகளின் சுவர்களில் கொலஸ்டிரால் போன்ற கொழுப்புப் பொருட்களும் வெள்ளைக் குருதி அணுக்களும் சேர்ந்து உட்புறத்தில் வீக்கத்தழும்பு உருவாகுவதால் தமனி குறுகிவிடுகின்றது. தமனியில் உள்ள இத்தகைய நிலை தமனிக்கூழ்மைத் தடிப்பு என அழைக்கப்படுகின்றது. இதனால் இதயத் தசைகளுக்குக் குறைந்த அளவு குருதியே செல்வதால் உயிர்வளிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்நிலை கொண்டுள்ளவர் கடினமாய் உழைக்கும் வேளையில் அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்படும்.

ஓய்வு எடுக்கும் போதும் நைட்ரேட்டு மாத்திரைகள் சாப்பிடும் போதும் இதய குருதியோட்டம் சீரடைந்து இந்த வலி குறையும். இதை மார்பு நெரிப்பு என்கிறோம். இந்த நிலைக்கான மருத்துவ உதவியை உரிய காலத்தில் தராவிட்டால் வீக்கத்தழும்பு வெடித்து குருதிக்குழாய்களுள் குருதி உறைந்து குழலியக்குருதியுறைமை ஏற்பட்டு நிரந்தரமான அடைப்பு உருவாகும். இந்நிலையில் குறிப்பிட்ட இதயத்தசைப் பகுதி குருதி பெறுவதை முற்றிலும் இழக்கின்றது. இதனால் இதயத் தசைகள் இறந்து விடுகின்றன. இந்த நேரத்தில் ஓய்வு எடுத்தாலும் வலி குறையாது. இத்தகைய சூழலே இதயத்தசை இறப்பு ஆகும்.

இதயத்தசை இறப்பை இதயக் கோளாறு, மாரடைப்பு போன்ற பொதுவான பெயர்களால் குறிப்பிட்டாலும் மாரடைப்பு எனப்படுவது மார்பு நெரிப்பு, இதயத்தசை இறப்பு ஆகிய இரு சூழல்களையும் பொதுவாகக் குறிப்பிடுவது வழக்கில் இருந்து வருகின்றது