Tata Harrier Safari: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களில் கூடுதல் அம்சங்கள் இணைக்கப்பட உள்ளன.

டாடாவின் புதிய தலைமுறை ஹாரியர், சஃபாரி

டாடா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்கள் தொடர்பான பணிகளை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. இவற்றின் அறிமுகத்திற்கு குறைந்தபட்சம் ஓராண்டு உள்ள சூழலில், தற்போது பணிகள் முடுக்கி விடப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய எஸ்யுவிக்கள் இரண்டுமே இன்ஜின் மற்றும் மின்சார எடிஷனில் இயங்கும் வகையிலான பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுவதோடு, ஆல் வீல் ட்ரைவ் அம்சத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் சந்தையில் உள்ள ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்கள், லேன்ட் ரோவரின் D8 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. புதிய நெகிழ்வுத்தன்மை மிக்க பிளாட்ஃபார்ம் காரணமாக, அடுத்த தலைமுறை எஸ்யுவிக்களானது தற்போதைய மாடல்களை காட்டிலும் அளவில் பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

புதிய தலைமுறை ஹாரியர்,சஃபாரி: ஆல் வீல் ட்ரைவ் சிஸ்டம்:

லேண்ட் ரோவருக்காக வடிவமைக்கப்பட்ட D8 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும், இன்ஜின் அடிப்படையிலான காரில் ஆல் வீல் ட்ரைவ் சிஸ்டம் வழங்க முடியாது என்பது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதன் காரணமாக மின்சார ஹாரியரில் ஆல் வீல் ட்ரைவ் அம்சத்தை பொருத்துவதற்காக D8 பிளாட்ஃபார்மை டாடா நிறுவனம் மிகப்பெரிய அளவில் திருத்தம் செய்தது. சராசரியான ஆஃப் - ரோட் அம்சங்களால் சஃபாரி கார் மாடலும், ஒரு எஸ்யுவி வாகனமாகவே கருதப்படுகிறது. ஆனாலும், தற்போதைய மாடலில் உள்ள ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் அமைப்பு, எந்த வகையிலும், அசல் மாடலின் ஆஃப்-ரோடிங் திறமைக்கு ஏற்றதாக இல்லை.

எனவே, இந்த கார் மாடல்களில் ஆல் வீல் ட்ரைவ் அம்சங்களை இணைப்பதற்காக டாடா நிறுவனம் புதிய பிளாட்ஃபார்மை உருவாக்கி வருகிறது. இது மஹிந்திராவின் NFA யூனிட்டைப் போலவே 4×4 ட்ரைவ் சிஸ்டத்துடன் இன்ஜின் மற்றும் மின்சார பவர்டிரெய்ன் விருப்பங்களை இணைக்கும் திறனை கொண்டுள்ளது. டாடாவின் புதிய தலைமுறை ஹாரியர் மற்றும் சஃபாரி மாடல்கள் முறையே டாரஸ் மற்றும் லியோ என்ற கோட்நேம்களை பெற்றுள்ளன.

கூடுதல் சைஸில் புதிய தலைமுறை ஹாரியர், சஃபாரி

புதிய பிளாட்ஃபார்மை பயன்படுத்துவதன் விளைவாக தற்போதைய மாடல்களை காட்டிலும், புதிய ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்களின் நீளம் 100 முதல் 200 மில்லி மீட்டர் அதிகரிக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக வீல் பேஸ் அதிகரித்து 7 சீட்டர் சஃபாரியில் கேபின் இடவசதியும் உயரும். நீளம் அதிகரிப்பதன் காரணமாக ஹாரியர் காரின் இடவசதியும் அதிகரித்து பயணிகளுக்கு சொகுசான பயணம் உறுதி செய்யப்படும். குடும்ப பயன்பாட்டிற்காக குறிப்பாக நடைமுறை தன்மைக்கு உகந்த மிட்-சைஸ் எஸ்யுவியை பார்ப்பவர்களுக்கு ஹாரியரை சிறந்த தேர்வாக மாற்றும்.

புதிய தொழில்நுட்ப வசதிகள்:

புதிய தலைமுறை பிளாட்ஃபார்மை உருவாக்குவதற்காக சீனாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் டாடா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் விளைவாக மேம்படுத்தப்பட்ட புதிய கேபின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் அடானமஸ் தொழில்நுட்பங்களை இரண்டு எஸ்யுவிக்களிலும் வழங்கப்பட உள்ளது. இந்த கார்களின் உற்பத்தியில் புதிய எலெக்ட்ரிகல் ஆர்கிடெக்ட்சரும் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய தலைமுறை ஹாரியர், சஃபாரி: இன்ஜின் விருப்பங்கள்

இன்ஜின் அடிப்படையில் இரண்டு அடுத்த தலைமுறை எஸ்யுவிக்களும், முற்றிலும் புதிய 1.5 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்சன் டர்போ சார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜினை பெறக்கூடும். இந்த இயந்திரம் நடப்பாண்டு இறுதியில் சந்தைப்படுத்தப்பட உள்ள, சியாரா எஸ்யுவி வாயிலாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம். ஃபியட் வாயிலான நம்பகமான 2.0 லிட்டர் டீசல் இன்ஜினும் ஆப்ஷனும் வழங்கப்படலாம். அடுத்த தலைமுறை ஹாரியர் மற்றும் சஃபாரியின் மின்சார எடிஷன்களானது, தற்போதைய ஹாரியர் EV ஐ அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய தலைமுறை ஹாரியர், சஃபாரி: விலை, வெளியீடு

அடுத்த தலைமுறை ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்களின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் அடுத்த ஆண்டு இரண்டாம் பாதிக்குள் சந்தைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் விலை 15 லட்ச ரூபாயில் தொடங்கி அதிகபட்சமாக 27 லட்சம் ரூபாய் வரையில் நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.