Kodaikanal Places to Visit in Summer: மலைகளின் இளவரசி என்று அழைக்கக்கூடிய கொடைக்கானல், மேற்கு தொடர்ச்சி மலையின் மிக முக்கிய சுற்றுலாத்தலமாக இருந்து வருகிறது. ஆண்டு தரும் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், கொடைக்கானலுக்கு வருகை புரிந்து வருகின்றனர். கொடைக்கானலில் பார்ப்பதற்கு பல்வேறு இடங்கள் இருந்தாலும், கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து தெரிந்து கொள்வோம் (Places to visit in Kodaikanal) .

பூம்பாறை - Poombarai

கொடைக்கானல் ஏரியிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ள மிகச் சிறிய கிராமம். இந்த இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் ஜீப் உதவியுடனே செல்ல முடியும். இங்கு உள்ள முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது. பூம்பாறையில் பூண்டு சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. மேகங்கள் தொட்டுச் செல்லும் காட்சிகளை ரம்யமாக பூம்பாறையிலிருந்து பார்க்க முடியும்.

டால்பின் நோஸ் Dolphin’s Nose

கொடைக்கானலில் அட்வென்சர் விரும்புபவர்களுக்கு மிக ஏற்ற இடமாக டால்பின் நோஸ் இருக்கிறது. இந்த இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால், சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கரடும் முரடான பாதையில் மலையேறிச் செல்ல வேண்டும். வாகனங்கள் அந்த இடத்திற்கு செல்ல முடியாது. அட்வென்சர் பயணம் விரும்புவார்கள் நிச்சயம் இந்த இடத்திற்கு சென்று வாருங்கள்.

பெரிஜம் ஏரி - Berijam Lake

கொடைக்கானலில் உள்ள மிகவும் பெரிய ஏரிகளில் ஒன்றாக பெரிஜம் ஏரி ஏறி உள்ளது. பைன் சூழப்பட்ட ஏரி பார்ப்பதற்கு ரம்மி அழகுடன் காணப்படும். கொடைக்கானலில் தவறவிட கூடாத இடங்களில் இதுவும் ஒன்று. இயற்கை ஆர்வலர்களுக்கும் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் இந்த ஏரி சிறந்த ஒன்றாக இருக்கும்.

நாம் செல்லும்போது அதிர்ஷ்டம் இருந்தால், ஏரிக்கு அருகில் இருக்கும் காட்டில் அல்லது ஏரியைச் சுற்றி காட்டெருமை, மான், பாம்புகள், யானைகள் மற்றும் குரங்குகள் போன்ற விலங்குகளை காண முடியும். அழகான காலை மற்றும் மாலை வேளையில் ஓய்வு எடுப்பதற்கு மிக சிறந்த இடம்.

ராக் பில்லர் - Kodaikanal Rock Pillar

கொடைக்கானலில் பிரமிப்பை உண்டாக்கக்கூடிய இடங்களில் ராக் பில்லரும் ஒன்று. இந்த பாறை பார்ப்பதற்கு இரண்டு தூண்களைப் போல் மலையின் முடிவு பகுதிகளில் அமைந்திருப்பது மிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கும். இதை அருகில் நின்று பார்ப்பதற்கும் வசதிகள் உள்ளன. இதன் அருகே பூங்கா ஒன்று உள்ளது.

கொடைக்கானல் படகு சவாரி Kodaikanal Boat House

கொடைக்கானல் மையப் பகுதியில் அமைந்துள்ள ஏரியில் படகு சவாரி செய்வது மிகவும் புகழ்பெற்றதாக உள்ளது. குடும்பத்துடன் செல்வதற்கு மிக ஏற்ற இடமாக உள்ளது. சைக்கிளிங் படகுகளுடன் செல்வதற்கும் வசதிகள் உள்ளன.

கொடைக்கானலில் உள்ள நீர்வீழ்ச்சிகள்

நீர்வீழ்ச்சியை பார்க்க யாருக்கு தான் பிடிக்காது. நீர்வீழ்ச்சியை பார்க்க விரும்புபவர்கள் கொடைக்கானலில் உள்ள நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசிக்கலாம். பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீழ்ச்சி, வெள்ளி அருவி, தேவதை (ஃபேரி) நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி ஆகிய நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசிக்கலாம்.

குக்கல் குகைகள் - Kukkal Cave

கொடைக்கானலில் காடுகளுக்குள் மலையேற்றம் செய்ய ஏற்ற இடமாக குக்கல் குகை உள்ளது. செங்குத்தான பாறைகள் மற்றும் பாயும் புல்வெளிகள் வழியாக மலையின், உச்சிக்கு செல்லும் குறுகிய பயணம் மலையேறுபவர்களுக்கு, சிறந்த அனுபவத்தை தருகிறது. இப்பகுதி மிகவும் குளிராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பழங்குடியினர் மறைந்த ஓவியங்களை பார்க்க முடியும். ஆரம்ப கால பழங்குடியினர் வசித்த இடமாக பார்க்கப்படுகிறது.

டெவில் கிச்சன் - Devil's Kitchen

குணா குகை என்று அழைக்கக்கூடிய டெவில் கிச்சன் கண்டிப்பாக பார்க்கக்கூடிய இடமாக உள்ளது. தற்போது மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்கு பிறகு இந்த இடத்திற்கு தனி அந்தஸ்து கிடைத்துள்ளது.

கொடைக்கானல் அருங்காட்சியங்கள்

கொடைக்கானலில் பல்வேறு அருங்காட்சியங்கள் உள்ளன. செண்பகனூர் இயற்கை வரலாற்று அருங்காட்சியம், மெழுகு அருங்காட்சியகம் ஆகியவற்றை விருப்பம் இருப்பவர்கள் சென்று பார்வையிடலாம்.