இசைஞானி இளையராஜா தனது முதல் சிம்பொனி இசையை லண்டனில் வெற்றிகரமாக அரேங்கேற்றிய நிலையில், அவருக்கு இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளையராஜா:

தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத வைரமாக திகழ்பவர் தான் இசைஞானி இளையராஜா சுமார் 50 வருட இசைப்பயணத்தில், ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமத்துள்ளார்.

தமிழ்நாட்டின் பண்ணைப்புரம் கிராமத்தில் இருந்து புறப்பட்டு லண்டன் அப்பல்லோ அரங்கில் சிம்பொனி இசையை அரங்கேற்றிய முதல் தமிழன் என்கிற இசைஞானி இளையராஜா தான். தனது இசையால் ஒரு தனிசாம்ராஜ்யமே நடத்தி வரும் இளையராஜாவிற்கு பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர், தமிழ் நாடு முதலமைச்சார், பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து பகிர்ந்து கொண்டே வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் லண்டனில் இருந்து திரும்பிய இளையராஜாவை அரசு மரியாதையுடன் வரவேற்றது தமிழ் நாடு அரசு.

அரசு சார்பில் விழா:

இதனைத்தொடர்ந்து அரை நூற்றாண்டு கால திரை இசை பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவு செய்திருப்பதாக தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில் இளையராஜாவை பிரதமர் அலுவலகத்திற்கு அழைத்து நேரில் வாழ்த்தினார் பிரதமர் நரேந்திரமோடி.”இளையராஜா அனைத்து வகையிலும் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். லண்டனில் தமது முதலாவது மேற்கத்திய கிளாசிக்கல் சிம்பொனியான ‘வேலியன்ட்டை’ அரங்கேற்றியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்தார்”என்று மோடி கூறியிருந்தார்.

பாரத ரத்னா:

இச்சூழலில் தான் இளையராஜாவிற்கு இந்திய நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருது கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர்களான காமராஜர், எம்.ஜி.ஆர், மற்றும் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது இப்போது இளையராஜாவுக்கும் கிடைக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக இந்திய அரசு 2010-ம் ஆண்டு பத்ம பூஷன், அதன் பின் 2018-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கி கெளரவித்தது. அதேபோல் இளையராஜா மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.