சென்னை: சட்டமன்றத் தேர்தலில் தவெக மற்றும் விஜய் ஆட்சிக்கு வாக்களித்துள்ளனர். இந்த மக்கள் தீர்ப்பை அதிமுக தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது அதிமுகவின் அதிகாரப்பூர்வப் பிளவு! 17-வது சட்டப்பேரவையின் முதல் நாளிலேயே, அதிமுக இரண்டு துண்டுகளாகச் சிதறியிருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தலைமையில் தனித்தனி அணிகளாக எம்.எல்.ஏக்கள் பிரிந்து நின்று கடிதம் கொடுத்திருப்பது, அக்கட்சியின் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்து அதிமுக தேர்தலைச் சந்தித்தது. இந்தத் தேர்தலில் 172 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 47 தொகுதிகளில் வென்றது. இதன் மூலம், சட்டமன்றத்தில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே அதிமுகவுக்குள் குழப்பம் நிலவிவருவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையில் 30 எம்.எல்.ஏ.க்கள் தனியாக பலகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அதிமுக இரண்டாக பிளவுபடுகிறது எனும் செய்திகள் வெளியாகின. அதேபோல், நேற்று சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதுவரையிலும் அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவர் தேர்வு செய்யப்படாத சூழலில், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்புக்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் உட்பட 17 எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையாவைச் சந்தித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்திருப்பதாக மனு கொடுத்தனர்.
அதேசமயம், காலை எம்.எல்.ஏ. பதவி ஏற்காத சி.வி. சண்முகம், மாலையில் சட்டமன்றம் சென்று பதவி ஏற்றார். அதுமட்டுமின்றி தற்காலிக சபாநாயகரைச் சந்தித்து எஸ்.பி. வேலுமணி, அதிமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்திருப்பதாக அவர் உட்பட 30 எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம் தலைமையில் தலைமை செயலகம் வந்த 24 எம்.எல்.ஏக்கள், சட்டமன்ற குழு தலைவராக எஸ்பி வேலுமணியும், கொறடாவாக சி விஜயபாஸ்கரையும் ஆதரித்து தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் ஆதரவு கடிதங்களை வழங்கினர். இதன் மூலம் அதிமுக உடைந்ததாக அரசல் புரசலாக பரவிய தகவல் உறுதியானது.

முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் செய்தியாளர் சந்தித்தனர்.

அப்போது பேசிய முன்னால் அமைச்சர் சி.வி. சண்முகம், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வி அடைந்திருக்கிறது. அதனை முழுமையாக ஒத்துக்கொள்கிறோம். இந்தக் கூட்டணி தோல்வி அடைந்திருக்கிறது. இன்றைக்கு அதிமுக என்ன செய்யப்போகிறது. இந்த இயக்கம் காப்பாற்றப்பட வேண்டும், நிலைநிறுத்தப்பட வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி மீண்டும் வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக மற்றும் விஜய் ஆட்சிக்கு வாக்களித்துள்ளனர். இந்த மக்கள் தீர்ப்பை அதிமுக தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறது.

இந்த நிலையில் கலந்தாலோசிக்கையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில யோசனைகளை முன்வைத்தார். இந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது திமுகவை எதிர்த்துதான். எந்த திமுகவை எதிர்த்தோமோ அந்த திமுக ஆதரவோடு என்னை முதல்வராக தேர்ந்தெடுக்க ஒப்புக்கொண்டார்கள் என ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் நாங்கள் பேரதிர்ச்சிக்கு உள்ளானோம். 'திமுகவோடு இணைந்தால் அதிமுக இல்லாமல் போய்விடும்', இது தவறு என்றோம். அதனை இபிஎஸ் ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

அதனால் பெரும்பான்மையான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதன்படி தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இப்போது இல்லை. மக்கள் தீர்ப்பை ஏற்று இன்று வெற்றிபெற்று முதலமைச்சராக உள்ள விஜய்யின் தவெக ஆட்சியை ஆதரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, அதிமுக சட்டமன்ற குழுவின் தலைவராக எஸ்பி வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொறடாவாக விஜயபாஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனை பொதுச் செயலாளரிடம் கூறியுள்ளோம். விரைவில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் கோரிக்கை வைக்கிறோம். கட்சியை மேம்படுத்த இபிஎஸ் விரைவில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவார் என நம்புகிறோம்" என தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட நிலையில், அதன் பின்னணியில் சிவி சண்முகம் முக்கிய பங்காற்றியதாக பேசப்பட்டது. தற்போது உருவாகி உள்ள எஸ்பி வேலுமணி தலைமை, ஈபிஎஸ் தலைமை என்ற பின்னணியிலும் சிவி சண்முகம் இருப்பது பட்டவர்த்தனமாக தெரியவந்துள்ளது. எஸ்பி வேலுமணி தலைமையிலான அதிமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? ஈபிஎஸ் தலைமையில் மீண்டும் அதிமுக உருவாகுமா? என்ற கேள்விகளுக்கு விரைவில் முடிவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.