Cuddalore School Bus Accident: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள செம்மங்குப்பத்தில் ரயில் மீது பள்ளி வேன் மோதியதில் 2 மாணவர்கள் உயிரிழந்தது மட்டுமின்றி எஞ்சிய மாணவர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விபத்திற்கு காரணம் யார்?

இந்த விவகாரத்தில் ரயில்வே கேட்கீப்பர் தூங்கியதன் அலட்சியமாகவே இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகிய நிலையில், தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பள்ளி வேன் மீது மோதிய கடலூர் - மயிலாடுதுறை ரயில் தண்டவாளத்தில் வருவதை அறிந்த கேட்கீப்பர் ரயில்வே கேட்டை மூடியதாக கூறப்படுகிறது.

ஓட்டுனர்தான் திறக்க சொன்னதா?

அப்போது, அந்த வழியாக பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் வந்துள்ளது. அப்போது, பள்ளி வேனை ஓட்டிக்கொண்டு வந்த ஓட்டுனர் கேட்கீப்பரிடம் ரயில்வே கேட்டை திறக்குமாறு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிக்குச் செல்ல தாமதம் ஆகிவிட்டதாகவும், அதன் காரணமாக ரயில்வே கேட்டை திறக்குமாறும் வேன் ஓட்டுனர் கேட்கீப்பரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே, கேட்கீப்பர் ரயில்வே கேட்டை திறந்ததாகவும் அப்போது தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த கடலூர் - மயிலாடுதுறை ரயில் பள்ளி வேன் மோதியதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கேட்கீப்பருக்கு சரமாரி அடி:

அதேசமயம், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் விபத்திற்கு காரணமான மயிலாடுதுறை - கடலூர் ரயில் வந்து கொண்டிருந்த சமயத்தில் கேட்கீப்பர் ரயில்வே கேட்டை மூடாமல் தூங்கிக் கொண்டிருந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். அவரின் அலட்சியத்தாலே பள்ளி வேன் மீது ரயில் மோதியதாக கூறப்படுகிறது.

தொடர் விசாரணை:

இந்த விவகாரத்தில் எந்த தகவல் உண்மையானது என்று இதுவரை வெளியாகவில்லை. இந்த கோர விபத்து தொடர்பாக ரயில்வே போலீசாரும், கடலூர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் இறுதியிலே கேட்கீப்பர் அலட்சியமா? அல்லது ஓட்டுனரின் அலட்சியமும் இதில் உள்ளதா? என்ற உண்மை தெரிய வரும். இந்த கோர விபத்தின் எதிரொலியாக கேட் கீப்பர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2 மாணவர்கள் உயிரிழப்பு:

இந்த விபத்தில் பள்ளி வேனில் இருந்த 11ம் வகுப்பு படித்து வந்த சாருமதி என்ற மாணவியும், 6ம் வகுப்பு படித்து வந்த நிவாஸ் என்ற மாணவனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 3 மாணவர்கள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

மேலும், இந்த விபத்து சம்பவத்தின்போது ரயில்வே கேட் அருகே நின்று கொண்டிருந்த அண்ணாதுரை என்பவர் விபத்தால் மின்சார வயர் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். காலையிலே நிகழ்ந்த இந்த கோர விபத்தில் பச்சிளம் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.