பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 50 வயது ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளியில் நடத்தப்பட்ட பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியால் இந்த அதிர்ச்சி சம்பவம் வெளியே வந்துள்ளது.

கோத்தகிரியைச் சேர்ந்தவர் 50 வயதான செந்தில் குமார். தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். 23 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தவர், கடந்த ஜூன் மாதத்தில் இந்த அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளார்.

பாலியல் தொல்லை

அறிவியல் ஆசிரியரான அவர், மாணவிகளிடம்‌ தவறான தொடுதலில் ஈடுபட்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இது தவறே என்று தெரியாத மாணவிகள், அதை சகித்து வந்திருக்கின்றனர்.

சிலர் வெளியே சொல்ல முயற்சி செய்வதை அறிந்து, அந்த மாணவிகளை மிரட்டி உள்ளார். இதற்கிடையே மாணவிகளை முத்தமிடுதல், தவறான தொடுதல் என ஆசிரியர் செந்தில் குமார் எல்லை மீறியதாகத் தெரிகிறது.

பாலியல் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

இதற்கிடையே காவல்துறை சார்பில், சம்பந்தப்பட்ட பள்ளியில் குட் டச், பேட் டச் பற்றிய பாலியல் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர் செந்தில் குமார் நிகழ்த்திய கொடூரங்கள் குறித்து 6ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தைரியமாக வெளியே சொல்லியுள்ளார்.

இதன் அடிப்படையில் அந்த மாணவி மற்றும் சக மாணவிகளிடையே காவல்துறை ரகசிய விசாரணை நடத்தியுள்ளது. இதில், செந்தில் குமார் 20 -க்கும் அதிகமான மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரிய வந்துள்ள்ளது. ஆசிரியர் செந்தில் குமார் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மற்ற பள்ளிகளிலும் விசாரணை

அவர் பணியாற்றிய மற்ற பள்ளிகளிலும் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.