பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியுமான சௌமியா அன்புமணி, தனது 'சிங்கப் பெண்ணே எழுந்து வா' என்ற தலைப்பிலான மகளிர் உரிமை மீட்புப் பயணத்தை இன்று காஞ்சிபுரத்தில் தொடங்கினார்.

சௌமியா அன்புமணிக்கு உற்சாக வரவேற்பு

பயணத்தைத் தொடங்கும் முன், அவர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மற்றும் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் தங்கத்தேர் வைக்கப்பட்டுள்ள, மணிமண்டபத்திற்கு சென்று தரிசனம் செய்தார். பயணத்தின் தொடக்கத்தின்போது, அவருக்குப் பெண்கள் சிறப்பான உற்சாக வரவேற்பு அளித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து, ஆரத்தி எடுத்தும், கோலாட்டம் மற்றும் பம்பை மேளம் போன்ற பாரம்பரிய வாத்தியங்கள் முழங்கவும் அன்புடன் வரவேற்றனர், இதனால் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டது.

இந்தப் பயணம் பத்து முக்கிய அம்சக் கோரிக்கைகளை மையமாகக் கொண்டு நடைபெற உள்ளது. பெண்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், அவர்களின் வாழ்க்கையில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதும் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கங்களாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் 'தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

கல்வி, மருத்துவம் இலவசம்

மேடையில் சௌமியா அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: "இங்கு நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இங்குள்ளவர்கள் கவலைகள் அனைத்தையும் மறந்து சின்னப் பெண்களாக மாறிவிட்டீர்கள். அப்படிப்பட்ட மகிழ்ச்சியான வாழ்க்கையை தினமும் வாழ வேண்டும் என்பதே நம்முடைய உரிமை. இன்று போல் என்றும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

இந்த உரிமைகளைக் கொடுக்க வேண்டியதுதான் அரசாங்கத்தின் கடமை." கல்வி, மருத்துவம், விவசாயம் என அனைத்தும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை. "கடனை அரசாங்கம் கொடுக்கக் கூடாது, மருத்துவச் செலவைக் கொடுக்கக் கூடாது, பள்ளிப்படிப்பு முதல் கல்லூரிப் படிப்பு வரை இலவசம், எந்த மருத்துவம் பார்த்தாலும் இலவசம் இதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை. இதுதான் பா.ம.க-வின் தேர்தல் அறிக்கையில் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறோம்.

விவசாயத்திற்கும் அனைத்தும் இலவசம். இவை அனைத்தும் உங்களுக்கு இலவசமாகக் கொடுத்துவிட்டால் உங்களுக்குக் கடன் சுமை இருக்காது." இவை அனைத்தும் இலவசமாகக் கிடைத்தால், பெண்கள் காஞ்சிபுரத்தில் இருக்கும் பட்டுப்புடவைகளை மகிழ்ச்சியாக வாங்கிக் கொள்ளலாம் என்றும், பொருளாதார முன்னேற்றம் பெண்களுக்கு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். குழந்தைகளின் வேலை மற்றும் வேலைவாய்ப்புகள் பெறுவது நம்முடைய உரிமை, அதைக் கொடுப்பது அரசின் கடமை என்றும் தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுங்கள்

மேலும், அவர் பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் பங்கெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "ஊரக உள்ளாட்சியில் 500 வாக்குகள் மட்டுமே இருக்கும், வார்டு மெம்பராக வேண்டும் என்றால் 150 ஓட்டுகள் வாங்கினால் கூட போதும் வார்டு உறுப்பினராக ஆகிவிடலாம். சொந்தக்காரர்களின் வாக்குகளை வாங்கினால் மட்டுமே போதும் நீங்கள் வெற்றி பெற்று விடலாம்.

நீங்கள் வெற்றி பெற்றால் தான் மகளிர்கள் காண உரிமையைப் பெற முடியும். இங்கு நாம் சொல்கின்ற விஷயத்தை மக்களிடம் சென்று கொண்டு சேருங்கள். அதைக் கேட்ட பொதுமக்கள், அந்தப் பெண்ணுக்கு நிறைய தெரிந்திருக்கிறது, வெற்றி பெற வைக்கலாம் என வாக்களிப்பார்கள். நீங்கள் கவுன்சிலராக வெற்றி பெற்றால் சேர்மன் பதவி வரை வெற்றி பெறலாம். உள்ளாட்சித் தேர்தலில் 50% பெண்களுக்கு இடஒதுக்கீடு இருக்கிறது, அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" எனப் பேசினார்.

டாஸ்மார்க்குக்கு பூட்டு

மதுவிலக்கு அமலாக்கம் குறித்துப் பேசிய அவர், பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதால் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், மீண்டும் பெண்கள் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மதுக்கடையை யாரும் மூடுவார் என்றால் அவர் அன்புமணிதான் மூடுவார் என்று உறுதியளித்தார்.

மேலும், பிரசவ வலி என்றால் இன்று 108 ஆம்புலன்ஸில் செல்கிறோம், அந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தைச் செயல்படுத்தியவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்தான் என்றும் நினைவுகூர்ந்தார்.

காஞ்சிபுரத்தின் வளர்ச்சி குறித்துப் பேசுகையில், "காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணாக இருந்தாலும் இந்த ஊர் முன்னேறாமல் இருக்கிறது. காஞ்சிபுரத்தில் அதிகமான தொழிற்சாலைகள் இருக்கின்றன.

உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும்

ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் போன்ற இடங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலமாக இருக்கின்றன. அங்குள்ளூர் மக்கள் வேலை செய்வதில்லை. வெளியூரில் இருப்பவர்கள் தான் வேலை செய்து வருகிறார்கள். ஆனால் அந்த நிறுவனங்களுக்கு நிலம் கொடுத்தது நாம் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள். நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை. தேர்தலில் போட்டியிட்டவர்கள் 75 சதவீதம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் எனத் தெரிவித்துதான் வந்தார்கள்.

நீங்கள் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கேளுங்கள். உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தால் பெண்கள் அதிக அளவில் அதில் வேலை செய்வார்கள். உங்களுக்குக் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் கூட டாஸ்மார்க் சென்றுவிடுகிறது. அந்த ஆயிரம் ரூபாய்க்கு கூட ஒரு சில பெண்களுக்கு வருவது கிடையாது. இனி உங்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய் தராது, நல்ல வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்து நீங்களே சம்பாதிப்பீர்கள்" எனக் கூறினார்.

திரையில் ஹீரோக்களை தேடாதீர்கள்

மேடையில் இருந்த பெண்கள் அனைவருமே மதுக்கடையை ஒழிக்கப் போராடியவர்கள் மற்றும் சிறை சென்றவர்கள் என்று குறிப்பிட்ட அவர், சக்தி கமலம்மாள் உள்ளிட்டோர் மது ஒழிப்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள் என்றார். அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு கூட மதுக்கடைக்கு எதிராக பலர் போராடி இருக்கிறார்கள், அவர்கள் தான் மேடையில் இருக்கிறார்கள். "உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் பா.ம.க.வில் இருக்கும் மகளிர் நிர்வாகிகள் தான் கொடி பிடித்துக் கொண்டு உங்களுக்காக முன்னிருப்பார்கள்.

பெண்களின் குரலாக இவர்கள்தான் இருக்கிறார்கள், இவர்கள்தான் ரியல் ஹீரோக்கள். ஹீரோக்களைத் திரையில் தேடாதீர்கள், இங்கிருப்பவர்கள் தான் உங்களுக்காக ஓடி வந்து உதவி செய்வார்கள். உங்களுக்கு மருத்துவ ரீதியான பிரச்சினை, காவல் நிலையத்தில் பிரச்சினை என்றால், இந்த மேடையில் இருக்கும் நிர்வாகிகள் தான் ஓடி வந்து உங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைப்பார்கள். இவர்கள்தான் நிஜ கதாநாயகர்கள். இவர்களைத் தான் நீங்கள் தூக்கிப் பிடிக்க வேண்டும்" என்று ஆதரவு கோரினார்.

இறுதியாக, நெசவாளர்களின் நிலை குறித்துப் பேசிய அவர், காஞ்சிபுரம் பட்டுக்குப் புகழ் பெற்ற நகரமாக இருந்தாலும், விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகம் பேர் செய்யக்கூடிய நெசவுத் தொழிலில் இருப்பவர்கள் ஏழ்மையான நிலையில் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். நெசவாளர்களுக்கு நல்ல திட்டங்கள் எதுவும் இங்கு இல்லை என்றும், கைத்தறி பூங்கா கொண்டு வந்தாலும் கட்டமைப்பை ஏற்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.