2026 தேர்தல் களம் ஆரியத்திற்கும் திராவிடத்திற்குமான போர்‌," மிரட்டல்களுக்குப் பணிய மாட்டோம்" என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.

வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

இந்தி திணிப்பை எதிர்த்து உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் நினைவைப் போற்றும் வகையில், திமுக சார்பில் காஞ்சிபுரத்தில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மழை பெய்த போதிலும், அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதியை வீரவணக்க நாளாகக் கடைபிடித்து வருவதையும், பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணில் திமுக தலைவராக நின்று உரையாற்றுவதில் மட்டற்ற பெருமை கொள்வதாகவும் உணர்ச்சிப்பொங்கத் தெரிவித்தார்.

தனது 13 வயதில் கோபாலபுரம் இளைஞர் திமுக சார்பில் அண்ணா ஜோதியை ஏந்தி வந்து கலைஞரிடம் ஒப்படைத்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட அவர், அன்று தொடங்கிய அந்த ஓட்டம் இன்றும் ஓயாமல் தொடர்வதாகக் குறிப்பிட்டார்.

"டப்பா இன்ஜின்" என விமர்சனம்

தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழித் திட்டம் என்ற பெயரில் ஒரு கும்பல் இந்தியைத் திணிக்கத் துடிப்பதாகச் சாடிய முதலமைச்சர், இது வெறும் மொழித் திணிப்பு மட்டுமல்ல, ஒரு இனத்தின் மீதான பண்பாட்டு படையெடுப்பு என்று எச்சரித்தார்.

பல்கலைக்கழகங்கள் வாயிலாக மறைமுகமாக இந்தியைத் திணிக்கப் பார்ப்பதாகவும், பணத்திற்கும் அதிகாரத்திற்கும் அஞ்சி பணியத் தமிழ்நாட்டின் திமுக தொண்டர்கள் அடிமைகள் அல்ல என்றும் முழங்கினார். மேலும், வடமாநில மக்களை ஏமாற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் பாஜகவின் "டபுள் இன்ஜின்" அரசு, தமிழ்நாட்டில் ஒருபோதும் ஓடாது என்றும், அது வெறும் "டப்பா இன்ஜின்" தான் என்றும் கடுமையாக விமர்சித்தார்.

பிரதமர் மோடிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

சமீபத்தில் தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, பழைய புளித்துப்போன "வடைகளை" சுட்டுவிட்டுச் சென்றிருப்பதாகக் கேலி செய்த ஸ்டாலின், தமிழகத்தின் நலன் சார்ந்த பல முக்கிய கேள்விகளை முன்வைத்தார். தமிழகத்திற்கு வரவேண்டிய கல்வி நிதி மற்றும் இயற்கை பேரிடர் நிவாரணத் தொகை எப்போது வரும்?, தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படுமா?, 10 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வரும் மதுரை எய்ம்ஸ் எப்போது முழுமையடையும்?, ஆளுநரின் அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?, கோவை, மதுரை மெட்ரோ ரயில் மற்றும் ஓசூர் விமான நிலையத் திட்டங்களுக்கு அனுமதி எப்போது? இந்த கேள்விகளுக்குப் பிரதமரிடம் பதில் இல்லை என்று சுட்டிக்காட்டிய அவர், கடந்த தேர்தல்களில் தமிழக மக்கள் வழங்கிய தோல்வியைப் பிரதமர் மறந்துவிடக் கூடாது என்றும் நினைவுபடுத்தினார்.

அரசியல் எதிர்ப்புகள் மற்றும் 2026 தேர்தல் களம்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை "10 தோல்விகளின் மாவீரர்" என்று சாடிய ஸ்டாலின், பாஜகவின் கொத்தடிமையாக அதிமுக செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். மோடி வந்ததால் சூரியன் மறைந்துவிட்டது என்று கூறிய பழனிச்சாமிக்கு, "வாழ்க்கை முழுவதும் கால்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் சூரியன் எப்படித் தெரியும், ஒருமுறை நிமிர்ந்து பாருங்கள், அப்போதுதான் சூரியனின் பவர் தெரியும்" என்று பதிலடி கொடுத்தார். 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது "ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும்" இடையிலான போர் என்று அறிவித்த அவர், புலனாய்வு அமைப்புகளை வைத்து திமுகவை மிரட்ட முடியாது என்று சவால் விடுத்தார்.

திராவிட மாடல் தொடர அழைப்பு

பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசும் பாஜக, குஜராத்தில் குற்றவாளிகளை விடுதலை செய்ததைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், மணிப்பூர் அல்லது உத்தரப் பிரதேசம் போலத் தமிழகம் வன்முறை காடாக மாறாமல் தடுக்க 'திராவிட மாடல்' அரசு தொடர வேண்டும் என்றார்.

7-வது முறையாக திமுக ஆட்சியை அமைக்கவும், டெல்லிக்குத் தலைகுனியாத தமிழகத்தை உருவாக்கவும் இன்றே தேர்தல் பரப்புரையைத் தொடங்குமாறு கழக உடன்பிறப்புகளுக்கும் கூட்டணித் தோழர்களுக்கும் அழைப்பு விடுத்தார். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று பிரதமரால் எப்படி சிரிக்காமல் சொல்ல முடிகிறது? என விமர்சித்தார்.