வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், இளநிலை முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியானது. இதில், ஏழு பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று, முதலிடத்தை பெற்றுள்ளனர். கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் (வேளாண்மைப் பிரிவு) ஆகிய இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளுக்கும் விண்ணப்பம் பெறப்பட்டன. நடப்பாண்டில், வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு அரசு கல்லூரிகளில் 2,516 இடங்களும் மற்றும் தனியார் கல்லூரிகளில் 4,405 இடங்களும் என மொத்தம் 6,921 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.

இதற்கு கடந்த மே 9ம் தேதி முதல் 20ம் தேதி வரை இணையதளம் மூலம் மொத்தம் 37,007 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்து முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் கடந்த 24ம் தேதி வெளியிடப்படும் எனவும், அன்றைய தினமே பொதுப்பிரிவு மற்றும் 7.5 சதவீத இடஒதுக்கீடு மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தரவரிசை பட்டியல் வெளியீடு மற்றும் கலந்தாய்வு என இரண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. விண்ணப்பித்த 37,007 பேரில் 29,349 பேர் தரவரிசைக்கு தகுதியானவர்கள். இதில், பொது இட ஒதுக்கீட்டிற்கான தரவரிசை பட்டியலில் 27,823 விண்ணப்பதாரர்களும், தொழில் முறை கல்வி இட ஒதுக்கீட்டில் 1,266 விண்ணப்பதாரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

தர வரிசை பட்டியலில் முதல் 10 இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகள் விவரம்: விழுப்புரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யா கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் முதலிடம் பிடித்தார். கடலூர் காட்டுமன்னார் கோயில் ஜிகே மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி ஹம்தா மெகதாப் 2ம் இடம், அதேபள்ளியை சேர்ந்த இலக்கியா 3ம் இடம், கள்ளக்குறிச்சி சேந்தமங்கலம் எஸ்எஸ்வி மேல் நிலைப்பள்ளி மாணவர் பிரித்விராஜ் 4ம் இடம், காட்டுமன்னார் கோயில் ஜிகே மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவிகள் கார்த்திகா 5ம் இடம், தீபிகா 6ம் இடம், கடலூர் கொல்லுகாரங்குட்டை வள்ளலார் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி கனிமொழி 7ம் இடம், விழுப்புரம் ரெட்விங்க்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி தாரணி 8ம் இடம், கடலூர் காட்டுமன்னார் கோயில் ஜி.கே மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி பிரிமதேளி 9ம் இடம், கடலூர் பண்ருட்டி மாடல் பள்ளி மாணவர் முரளிதரன் 10ம் இடம் பிடித்துள்ளனர்.

முதல் பத்து இடங்களில், ஏழு பேர் கடலுார் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள்!

தரவரிசை பட்டியல் படி, விழுப்புரம் மாணவி திவ்யா, கடலுாரை சேர்ந்த மாணவிகள் ஹம்தா மெஹதாப், இலக்கியா, கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவன் பிரித்திவிராஜ், கடலுாரை சேர்ந்த கார்த்திகா, தீபிகா, கனிமொழி, விழுப்புரத்தை சேர்ந்த தாரணி, கடலுாரை சேர்ந்த பிரிமாதெலி, முரளிதரன் ஆகியோர், முதல் பத்து இடங்களை பெற்றுள்ளனர். முதல் பத்து இடங்களில், ஏழு பேர் கடலுார் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள். இருவர் விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கலந்தாய்வு தேதி !

வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை டீன் வெங்கடேச பழனிசாமி கூறுகையில், '' கடந்தாண்டு மீன்வளப்பல்கலைக்கும் சேர்த்து, சேர்க்கை நடத்தப்பட்டது. தற்போது தனியாக நடத்தவுள்ளனர். நடப்பாண்டில், வேளாண் பல்கலை மற்றும் அண்ணாமலை பல்கலையின் வேளாண் படிப்புகளுக்கும் சேர்த்து சேர்க்கை ஒரு விண்ணப்ப அடிப்படையில் ஆன்லைன் கவுன்சிலிங் வாயிலாக நடைபெறும். வேளாண் பல்கலையில், 14 இளமறிவியல் படிப்பில், அரசு கல்லுாரிகளில், 2516 இடங்களும், தனியார் கல்லுாரிகளில் 4,405 இடங்களும் உள்ளன. தற்போது வழங்கப்பட்ட 'பிரேக்-அப்' தகவல்கள் அனைத்தும் அகாடமிக் பிரிவுக்கு உட்பட்டவை. தொழிற்கல்வி படிப்புகளுக்கான பிரேக்-அப் பின்னர் வழங்கப்படும். கலந்தாய்வு தேதி குறித்து ஆலோசனை நடந்து வருகிறது, '' என்றார்.