குளிர்காலம் நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. பேன், ஏசி என எதுவும் இல்லாமல் கடந்த 6 மாதமாக நம்மால் ஒருநாளை கூட கடக்க முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் இன்று எதுவும் இருந்தாலும் இயங்க வேண்டாம் என்ற அளவுக்கு வழக்கத்தைக் காட்டிலும் அதிக குளிர் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை டிசம்பர் முதல் மார்ச் வரை முன்பனிக்காலம் மற்றும் பின்பனிக்காலம் என குளிர்காலம் உள்ளது.

இந்த குளிர் காலத்தில் நம் உடல் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம். இயற்கையாகவே இந்தியாவில் வசிக்கும் மக்கள் கோடை காலத்திற்கு பழக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்களால் மழை, குளிர் போன்ற காலநிலைகளை எதிர்கொள்வது சிரமமாகும். இப்படியான நிலையில் ஒவ்வொரு பருவ காலத்திலும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு, நம் உடல் ஏற்றுக்கொள்ளும் விஷயங்கள் என அனைத்தும் மாறுபடும்.

அப்படியான நிலையில் குளிர்காலத்தில் பலர் தண்ணீர் குடிப்பதைக் குறைப்பார்கள். தாகம் எடுக்காது என்றாலும், அதிக தண்ணீர் குடிப்பது அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு வழிவகுக்கலாம் என்பதால் பலரும் தண்ணீரை குறைக்கிறார்கள். ஆனால் அது உடலில் உள்ள நீர்ச்சத்தை குறைக்கும் என்பது பலருக்கும் தெரியாது. குளிர்காலம் வந்து விட்டால் அடிப்படையில் நம்மை சீண்டும் ஒரு பிரச்னை உடல் வலி, மிகவும் சோர்வாக உணர்வது போன்றவை தான். இவை அனைத்தும் தண்ணீர் அருந்தாதன் விளைவால் ஏற்படும்.

இப்படியே குளிர்காலம் முழுக்க தொடர்ந்தால் உடலில் பல நோய்கள் எளிதாக நுழைந்து விடும். குளிர்காலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, நமது மூளை உடலுக்கு தண்ணீர் தேவையில்லை என தோன்றுவதால் ஏற்படும் விளைவாகும். குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்க இரத்த நாளங்கள் சுருங்கிவிடுகின்றன. இதனால் மூளையில் உள்ள தாக மையம் சரியாக இயங்காமல் நம்மை 40 சதவிகிதம் வரை தாகம் குறைய வைக்கிறது.

குளிர்காலக் காற்று உங்கள் உடலில் இருந்து சூடான காற்று வெளியேற்றுகிறது. இதனால் நீர்ச்சத்து குறைந்து உடல் வலி ஏற்படுகிறது. குளிர்காலத்தில் தடிமனான ஆடைகள் மற்றும் ஸ்வெட்டர்களை அணிவதால் வியர்வை தோன்றி உடனடியாக ஆவியாகிறது. குளிர்காலத்தில், பலர் வீடுகளிலும் அலுவலகங்களிலும் ஹீட்டர்களைப் பயன்படுத்துகிறோம். சூடான நீர் உடலில் படுவதால் அவை ஈரப்பதத்தை உறிஞ்சி நீரிழப்பை ஏற்படுத்துகிறது. தொண்டை வறட்சி மற்றும் வாய் வறட்சி வரை ஏற்படுகிறது.

குளிர்காலத்தில் தேநீர் மற்றும் காபி அதிகளவில் சூடாக எடுப்போம். ஆனால் அவை அடிக்கடி எடுப்பதால் உடல் மெதுவாக நீரிழப்பு உண்டாகும். சோர்வு, உதடு வெடிப்பு, வறண்ட சருமம் அல்லது அரிப்பு, அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர், இனிப்பு சாப்பிட வேண்டிய ஏக்கம் போன்றவை உடலில் நீர்ச்சத்து குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகளாகும். இதில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்தித்தால் நாள் ஒன்றுக்கு 7 முதல் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்படுகிறது.