இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஆளும் பாஜக சந்தித்த பெரும் பின்னடைவுக்கு வேலையின்மை அதிகரித்ததே காரணம் என சொல்லப்படுகிறது.

வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல செய்தி: குறிப்பாக, படித்து முடித்து புதிதாக வேலை தேடும் இளைஞர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், அவர்கள் பெருமூச்சு விடும் அளவுக்கு ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதாவது, அனுபவம் இல்லாத புதிதாக வேலை தேடுபவர்களை பணியில் அமர்த்த இந்தியா முழுவதும் 72 சதவிகித நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 603 நிறுவனங்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அனுபவம் இல்லாத இளைஞர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டு வருவதாக 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் 68 சதவிகித நிறுவனங்கள் கருத்து தெரிவித்தன.

அனுபவம் இல்லாத இளைஞர்களை வேலையில் எடுக்கப்போவதாக கடந்த 2023ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் 65 சதவிகித நிறுவனங்கள் மட்டுமே கருத்து தெரிவித்தன. இதுதொடர்பான ஆய்வறிக்கையை TeamLease EdTech வெளியிட்டுள்ளது.

ஆய்வறிக்கை சொல்வது என்ன? இதுகுறித்து TeamLease EdTech நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான சாந்தனு ரூஜ், "அனுபவம் இல்லாத இளைஞர்களை பணியமர்த்தும் எண்ணம் அதிகரிப்பது ஊக்கமளிக்கும் அறிகுறியாகும். இது முதலாளிகள் மத்தியில் வளர்ந்து வரும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. புதிய திறமையாளர்களுக்கு பணியாளர்களுக்கு மதிப்புமிக்க வாய்ப்புகளை வழங்குகிறது.

பணியிடங்கள் மாற்றத்திற்கு உள்ளாகும்போது புதியவர்களுக்கு மட்டுமல்ல, மேலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் தொடர்ந்து கற்றுக்கொள்வது காலத்தின் தேவை" என்றார்.

சமீபத்திய தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) தரவுகளின்படி, இந்தியாவின் வேலையின்மை விகிதம் 3.1 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், இந்த தரவுகள் நம்பகத்தன்மையுடன் இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

அனுபவம் இல்லாத இளைஞர்களை பணியில் அமர்த்த இ-காமர்ஸ், ஸ்டார்ட்அப் தொழில்நுட்ப நிறுவனங்கள், பொறியியல், உள்கட்டமைப்பு மற்றும் சில்லறை வணிக நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. குறிப்பாக, பெங்களூருவில் அமைந்துள்ள நிறுவனங்கள், அனுபவம் இல்லாத இளைஞர்களை வேலையில் எடுப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.

அதற்கு அடுத்தபடியாக மும்பையில் உள்ள நிறுவனங்களும், மூன்றாவதாக சென்னையில் உள்ள நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.