விழுப்புரம்: மயிலம் அருகே தனிமையில் இருந்த பெண்ணின் வீட்டு கதவை தட்டிய வட மாநில இளைஞர், திருடன் என்று நினைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள செண்டூர் கிருஷ்ணா நகரை சேர்ந்த சேதுராமன் (35), ஜேசிபி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஷாலினி (30). இவர் தனது கணவர் வேலைக்கு சென்றபின் வீட்டில் தனியாக இருந்து உள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை 5:30 மணி அளவில் சேதுராமனின் வீட்டை மர்ம நபர் ஒருவர் தட்டியுள்ளார். அப்பொழுது கதவை திறந்த ஷாலினி எதிரில் வடநாட்டு இளைஞர் ஒருவர் நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அந்த நபர் போதையில் இருந்ததாகவும், அந்தப் பெண்ணை ஆக்ரோஷமாக துரத்தியதால் பயத்தில் ஷாலினி கூச்சலிடவே அங்கிருந்த கிராம பொதுமக்கள் அந்த மர்ம நபரை பிடித்து அடித்துள்ளனர். பின்னர் அருகில் இருந்த மின் கம்பத்தில் கட்டி வைத்து மயிலம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த மர்ம நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஜார்க்கண்ட் மாநிலம், சாயித் கண் மாவட்டம், ஆசான் போலா கிராமத்தை சேர்ந்த நொரசு துடு மகன் தாவுத் துடு (27) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த நபருடன் இரண்டு நண்பர்கள் வந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மயிலம் போலீசார் அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று கிராமத்தில் தனியாக இருந்த பெண்ணிடம் கொள்ளையடிக்க முயற்சி செய்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.