காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் மழைப் பொழிவு மற்றும் தொடர்ச்சியான மேகமூட்டம் காரணமாக, நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகளின் செயல்பாடு அதிகரித்துள்ளது. காற்றின் ஈரப்பதம் 90% முதல் 97% வரை உயர்ந்துள்ள நிலையில், விவசாயிகள் மத்தியில் இலைசுருட்டுப்புழு, ஆனைக்கொம்பன் ஈ மற்றும் தண்டு துளைப்பான் ஆகியவற்றின் தாக்குதல் பரவலாகக் காணப்படுகிறது. இந்தப் பூச்சித் தாக்குதல்களின் அறிகுறிகள் மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து, காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் (மாதூர்) விரிவான செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

பூச்சித் தாக்குதலின் அறிகுறிகள்

வேளாண் அறிவியல் நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, விவசாயிகள் தங்கள் வயல்களில் காணப்படும் பூச்சித் தாக்குதல் அறிகுறிகளை அடையாளம் காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்:

இலைசுருட்டுப்புழு தாக்குதல்

நெல் இலைகள் நீளவாக்கில் மடக்கப்பட்டிருக்கும்.

புழுக்கள் இலைகளின் பச்சை நிறத் திசுக்களைச் சுரண்டுவதால், இலைகள் வெண்மையாக மாறி காய்ந்துவிடும்.

தீவிரத் தாக்குதல் ஏற்பட்டால், முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில், காய்ந்தது போல் காட்சியளிக்கும்.

ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல்

தாக்கப்பட்ட நெல் தூர்கள் வெங்காய இலை போல் அல்லது வெள்ளித்தண்டு போல் தோற்றம் அளிக்கும்.

பயிரின் வளர்ச்சி குன்றி காணப்படும்.

தண்டு துளைப்பான் தாக்குதல்

இலையின் நுனியில் பழுப்பு நிற முட்டைக் குவியல்கள் காணப்படும்.

தழைப்பருவத்தில் புழுக்கள் தண்டுகளுக்குள் நுழைந்து உட்கொள்வதால், அதன் நடுப்பகுதி காய்ந்துபோய், 'சாவு மையம்' (Dead Heart) உருவாகும்.

நன்கு வளர்ச்சியடைந்த பயிரில்: பால் பிடிக்கும் பருவத்தின்போது தாக்குதல் ஏற்பட்டால், முழு தானியக் கதிர்களும் வெண்மையாகக் காய்ந்து, 'வெண்கதிர்' (White Ear) உருவாகும் அபாயம் உள்ளது.

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகள்

இந்தப் பூச்சிகளை திறம்படக் கட்டுப்படுத்த, விவசாயிகள் உடனடியாக ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை (Integrated Pest Management - IPM) தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும் என்று வேளாண் அறிவியல் நிலையம் வலியுறுத்தியுள்ளது.

1. சாகுபடி முறைகள்

உரப் பயன்பாடு குறைப்பு: தழைச்சத்து உரங்களான யூரியா மற்றும் அமோனியம் சல்பேட் உரங்களை அதிகமாக இடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிக யூரியா, பூச்சித் தாக்குதலை ஊக்குவிக்கும்.

வயல் வரப்பு சுத்தம்: வயல் வரப்புகளில் உள்ள களைகளை அகற்றி, வரப்புகளைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

2.உயிரியல் மற்றும் இயற்கை கட்டுப்பாட்டு முறைகள்

ஒட்டுண்ணி விடுதல் (Biological Control): இலைசுருட்டுப்புழு மற்றும் தண்டு துளைப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, முட்டை ஒட்டுண்ணிகளான ட்ரைகோகிரம்மா கைலோனிஸ் மற்றும் ட்ரைகோகிரம்மா ஜபோனிகம் ஆகியவற்றை விட வேண்டும்.

பயிர் நடவு செய்த 37, 44 மற்றும் 51 ஆகிய நாட்களில், மொத்தம் மூன்று முறை, ஒரு ஏக்கருக்கு 2 சிசி என்ற அளவில் இந்த ஒட்டுண்ணிகளை வயலில் விட வேண்டும்.

வேப்பம் பூச்சிவிரட்டி: வேப்பங்கொட்டை சாறு 5 சதவிகிதம் அல்லது வேப்பெண்ணெய் 3 லிட்டருடன் 200 கிராம் காதி சோப்பைக் கலந்து, 200 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஏக்கருக்குத் தெளிக்க வேண்டும்.

3.கண்காணிப்பு மற்றும் பொறியமைப்பு

விளக்கு பொறி: பூச்சிகளின் செயல்பாட்டைக் கண்காணிக்க, முடிந்த இடங்களில் ஏக்கருக்கு ஒரு விளக்கு பொறியை அமைக்கலாம்.

இனக்கவர்ச்சிப் பொறி: ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சிப் பொறிகளை அமைத்துப் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கண்காணிக்க வேண்டும்.

இரசாயனக் கட்டுப்பாடு (தீவிர தாக்குதலுக்கு மட்டும்)

இலைசுருட்டுப்புழு மற்றும் தண்டு துளைப்பான் தாக்குதல் பொருளாதார சேத நிலையை (Economic Threshold Level - ETL) அதாவது 10 சதவிகிதத்திற்கு மேல் தாண்டும்போது மட்டுமே, கீழ்க்கண்ட இரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தலாம்:

ஐசோசைக்ளோசீரம் 18.1% எஸ்.சி 40 மில்லி , ஒட்டும் பசை சேர்த்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்கவும்.

இலைசுருட்டுப்புழு, தண்டு துளைப்பான் சயன்டிரனிலிபுரோல் 16.9% + லுபிநூரான் 16.9% எஸ்.சி | 20 மில்லி ஒட்டும் பசை சேர்த்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்கவும்.

ஆனைக்கொம்பன் ஈ - பைப்ரோனில் 0.3% ஜி.ஆர் | 10 கிலோ தேவையான மணலுடன் கலந்து வயலில் இடவும்.

விவசாயிகள் மேற்கண்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தங்கள் நெல் பயிர்களைப் பூச்சித் தாக்குதலில் இருந்து பாதுகாத்து, நல்ல மகசூல் பெற வேண்டும் என்று காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.