விழுப்புரம்: விழுப்புரத்தில் தனியார் பள்ளி மாணவன் சிறப்பு வகுப்பிற்கு காலை வந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியன. மாரடைப்பு ஏற்பட்டு மாணவன் உயிரிழந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

விழுப்புரம் திருவிக வீதியிலுள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மேல தெருவை சார்ந்த மகேஸ்வரியின் இரண்டாவது மகன் மோகன் ராஜ் பதினோராம் வகுப்பு கல்வி பயின்று வருகிறார். வழக்கம் போல் இன்று பள்ளிக்கு வருகை புரிந்த மாணவன் சிறப்பு வகுப்பில் பங்கேற்க பள்ளியின் வகுப்பறையில் உள்ள முதல் இருக்கையில் மாணவன் மோகன்ராஜ் அமர்ந்தபோது மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளான். இதனையடுத்து அருகிலிருந்த மாணவர்கள் மயங்கி விழுந்த மாணவனை தூக்கி அமர வைத்து பள்ளி ஆசிரியருக்கு தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து பள்ளி மாணவனை நான்குமுனை சந்திப்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் பள்ளி நிர்வாகத்தினர் அனுமதித்த போது ஆக்ஸிஜன் சுவாசம் குறைந்து இருந்ததால் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்திலையே மாணவன் உயிரிழந்துள்ளான். இதனையடுத்து பள்ளி மாணவனின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவன் வகுப்பில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் விசாரனை செய்தனர்.

பள்ளி நிர்வாகத்தினர் மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு தங்கள் தரப்பில் எந்த தவறும் இல்லை மாணவன் மயங்கி விழுந்தையடுத்து மருத்துவமனையில் அனுமதித்தபோது உயிரிழந்துவிட்டதாக விளக்கத்தினை தெரிவித்துள்ளனர். பள்ளி மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி சோகத்தை ஏற்படுத்திய நிலையில் மாணவனின் பெற்றோர் மகனுக்கு எந்த உடல் பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளனர். உயிரிழந்த மாணவனின் உடலை முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ததில் மாரடைப்பு ஏற்பட்டு மாணவன் உயிரிழந்தது தெரியவந்தது.