உத்தரப்பிரதேச மாநிலத்தில் பர்தா அணியாமல் வெளியில் சென்ற தனது மனைவியை கணவர் கொலை செய்து புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஷாம்லியில் தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர், ‘எனது மனைவி புகைப்படம் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக ஆதாருக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கவில்லை என்றும், தனது இரண்டு மகள்களையும் கொன்றுவிட்டேன்’ எனவும் சர்வ சாதாரணமாக தெரிவித்துள்ளார்.

திருமணங்களில் சமையல்காரராகப் பணியாற்றிய ஃபாரூக் தனது மனைவி தஹிராவுடன் அப்பகுதியில் வசித்து வந்தார். இந்த தம்பதியருக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர். அஃப்ரீன், அஸ்மீன்,செஹ்ரீன், பிலால் மற்றும் அர்ஷத் ஆகியோர் இருந்த நிலையில் தனது மனைவியைக் கொன்ற பிறகு, ஃபாரூக், அஃப்ரீனைச் சுட்டுக் கொன்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் செஹ்ரீனை கழுத்தை நெரித்து கொன்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபாரூக் எப்போதும் தனது மனைவி தஹிரா பர்தா அணிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வந்துள்ளார். திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவர் அதனை மாற்றவில்லை. இதன் காரணமாக தஹிராவை ஆதார் மற்றும் ரேஷன் கார்டு போன்ற எந்த அடையாள ஆவணத்தையும் செய்ய அனுமதிக்கவில்லை,. ஏனெனில் அந்த ஆவணங்களில் எல்லாம் பர்தா இல்லாமல் அவரது புகைப்படம் இருக்கும் என்பதால் இப்படி நடந்துள்ளார்.

இந்த நிலையில் தான் தனது மனைவி பர்தா அணியாமல் பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருப்பதை அறிந்ததும் ஃபாரூக் கோபமடைந்தார். அதுமட்டுமல்லாமல் விருந்தினர் தங்கள் வீட்டிற்கு வரும்போதெல்லாம் தனது மாமனாரையும், தனது மனைவியைச் சந்திக்கவும் அவர் அனுமதிக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வீட்டு வேலைகள் தொடர்பாக தானும் தனது மனைவியும் அடிக்கடி சண்டையிட்டு கொண்டதாகவும் அவர் விசாரணையில் கூறியுள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்பு தஹிரா பர்தா அணியாமல் தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றதால் தனக்கு அவமானம் ஏற்பட்டதாக ஃபாரூக் நினைத்துள்ளார். இதனால் கோபமடைந்த அவர், கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி நள்ளிரவில் சமையலறையில் தாஹிராவைச் சுட்டுக் கொன்றார். மூத்த மகள் அஃப்ரீன் துப்பாக்கிச் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்த நிலையில் அவரையும் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றுள்ளார். என்ன நடந்தது என்று பார்க்க அவரது இரண்டாவது மகள் செஹ்ரீனும் வந்த நிலையில் தான் மாட்டிக்கொள்வோம் என அச்சிறுமியையும் கொன்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வீட்டு முற்றத்தில் கழிப்பறை அமைப்பதற்காக தோண்டப்பட்ட 9 அடி ஆழ குழியில் அவர்களின் உடல்களை ஃபாரூக் புதைத்துள்ளார். மேலும் அதன் மேல் ஒரு செங்கல் தரையை அமைத்தார். இந்த நிலையில் தஹிராவையும் அவரது இரண்டு மகள்களையும் ஒரு வாரமாக காணவில்லை. அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் சந்தேகமடைந்து ஃபாரூக் மீது மாமனார் தாவூத் புகாரளித்தார். இதனால் இந்த கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஃபாரூக் வீட்டில் இருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம், ஒரு கைத்துப்பாக்கி, ஏழு வெற்று குண்டுகள் மற்றும் 10 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.