திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம் செய்தார். ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம்

தமிழ்த்திரை உலகின் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய நடிகர் சிவகார்த்திகேயன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். நேற்று ஆனி வருசாபிஷேகத்தை முன்னிட்டு திடீரென கோயிலுக்கு வந்த அவர் மூலவர், சண்முகர், குரு தட்சிணாமூர்த்தி மற்றும் வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோயிலிலிருந்து வெளியே வந்த அவரை சண்முகவிலாஸ் மண்டபத்தில் வைத்து கோயில் பணியாளர்களும் பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினரும் சூழ்ந்து கொண்டு போட்டிபோட்டு புகைப்படம் எடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து பிரகாரத்தை விட்டு வெளியே வந்த நடிகர் சிவகார்த்திகேயன் கோயில் பேட்டரி வாகனத்தில் சென்று வள்ளி குகை மேல் நின்று கோபுர தரிசனம் செய்தார். அப்போது அவரை பார்த்த ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு கைகளை குலுக்கியும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். தன்னை தேடி வந்த அனைத்து ரசிகர்களுக்கும் சிரித்த முகத்துடன் கைகளை குலுக்கி புகைப்படம் எடுத்து அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கினார் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்றுவருவதாகவும், படப்படிப்பு அருமையாக சென்றுகொண்டிருப்பதாகவும் விரைவில் ரசிகர்களுக்கு புதிய அப்டேட் வரும் என தெரிவித்தார்.

நடிகை ரோஜா சுவாமி தரிசனம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் திரைப்பிரபலங்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில் நடிகை ரோஜா, அவரது கணவரும் இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி சுவாமி தரிசனம் செய்தனர். ரசிகர்கள் செல்ஃபி எடுக்க சூழ்ந்து கொண்டனர்.

ஆனி உத்திர வருஷாபிஷேகத்தையொட்டி கோயிலுக்கு வந்த நடிகையும் ஆந்திரா மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா அவரது கணவரும் இயக்குனருமான ஆர்.கே.செல்வமணியுடன் சுவாமி தரிசனத்திற்காக வந்திருந்தார். அவர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தார்கள். தொடர்ந்து கோவிலிலிருந்து வெளியே வந்த அவரை சண்முகவிலாஸ் மண்டபத்தில் வைத்து கோவில் பணியாளர்களும், பக்தர்களும் சூழ்ந்து கொண்டு போட்டிபோட்டு செல்ஃபி எடுத்தனர். நடிகை ரோஜாவும் பக்தர்களுடன் சிரித்த முகத்தோடு புகைப்படம் எடுத்து கொண்டார்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் அவரது உதவி இயக்குனர்கள் மற்றும் உதவியாளர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோல் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது அவர்களை செய்தியாளர்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். அப்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர்கள் செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதை தடுத்தனர்.

மேலும் அங்கிருந்த ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தியாளரின் செல்போனை பறித்துக்கொண்டனர். மேலும் தொடர்ந்து செய்தியாளர்களின் கேமரா மற்றும் செல்போனை தட்டிவிட்டு அவரது உதவியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை இயக்குனர் முருகதாஸ் கண்டும் காணததுபோல சென்றார். இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை பார்த்ததும் புகைப்படம் எடுக்கச்சென்ற ரசிகர்களையும் புகைப்படம் எடுக்கவிடாமல் தடுத்து வெளியேற்றியதால் ரசிகர்களும் ஏமாற்றத்திற்குள்ளாகினர். திரை உலகின் முன்னணி இயக்குனராக இருக்கக்கூடிய ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனர்கள் ரசிகர்களிடையேயும் பத்திரிகையாளர்களிடமும் குண்டர்கள் போல நடந்துகொண்ட சம்பவம் அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க செய்தது.