தஞ்சாவூர்: விட்டு விலகிய காதலியை தேடிச்சென்று கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் வெறிப்பிடித்த காதலர். போலீசாரின் இரும்பு பிடியில் சிக்கி இப்போது அவரது வாழ்க்கையும் வீணாகி விட்டது. நிமிட நேரத்தில் எடுத்த முடிவால் பெண்ணை இழந்து பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் பெற்றோர்.

தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியராக சேர்ந்தார்

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (25) ஆசிரியர் பயிற்சி முடித்த ரமணிக்கு மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளயில், பள்ளி மேலாண்மை குழு மூலம் ஆசிரியை பணி கிடைத்தது. கடந்த ஜூன் 10ம் தேதி தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாக பணியில் உற்சாகமாக சேர்ந்தார்.

ரமணி வசிக்கும் அதே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் மதன்குமார் (28) 10ம் வகுப்பு படித்துள்ள இவர் நான்கு ஆண்டுகள் சிங்கப்பூரில் பணியாற்றியுள்ளார். தனது தங்கையின் திருமணத்திற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் ஊருக்கு திரும்பி வந்தார். மீண்டும் சிங்கப்பூருக்கு செல்லவில்லை. இங்கேயே மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார்.

காதல் பிறந்தது... திருமணத்திற்கும் நேரம் தகைந்தது

ரமணியும், மதனும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்குள்ளும் காதல் மலர கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் மதன்குமார் தனது பெற்றோரிடம் தான் காதலிக்கும் விஷயத்தை கூறி, ரமணியை பெண் கேட்க சொல்லியுள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மதன்குமாரின் பெற்றோர், ரமணியின் பெற்றோரை சந்தித்து பெண் கேட்டுள்ளனர். ஒரே பகுதியில் வசிப்பதாலும் பெண்ணும் அருகிலேயே இருப்பாள் என்பதாலும் ரமணியின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

விட்டு விலகிய காதலி... என்ன காரணம்?

இந்நிலையில் கடந்த ஒருமாதமாக ரமணியின் பெற்றோர், மதன்குமாருக்கு தங்களின் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பது குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்காமலும், திருமண விஷயத்தில் ஆர்வம் காட்டாமல் இருந்துள்ளனர். ரமணியும் மதன்குமாரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதற்கு பின்னணியில் ஒரு விஷயம் நடந்துள்ளது. ரமணியின் உறவினர் ஒருவர், மதன்குமாரின் பழக்க வழக்கம் சரியில்லை என ரமணியின் பெற்றோரை எச்சரித்துள்ளார். இத்தகவலும் ரமணிக்கு தெரியவந்ததால் மதன்குமாரிடம் இருந்து ரமணி விலக ஆரம்பித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

முதலில் சரி என்று சொன்னவர்கள் பின்னர் இதில் ஆர்வம் காட்டவில்லையே என்று ரமணியிடம், மதன்குமார் நேற்று மாலை வேலை முடிந்து வந்த போது திருமணம் தொடர்பாக பேசியுள்ளார். அப்போது ரமணி, மதன்குமாரை திட்டி விட்டு சென்று விட்டாராம். மேலும் ரமணியின் பெற்றோரும் திருமணத்திற்கு எங்களுக்கு சம்மதம் இல்லை என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

உயிரை பறித்த மீன் வெட்டும் கத்தி

இதனால் ஆத்திரமடைந்த மதன்குமார் இன்று காலை ரமணி பள்ளிக்கு சென்ற நிலையில், அவரை சந்திக்க சென்றார். அங்கு ஆசிரியர்கள் ஓய்வறையில் இருந்த ரமணியிடம் தன்னைதான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என கூறி தகராறு செய்துள்ளார். இருவருக்கும் இதில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பிற ஆசிரியர்கள் என்னவென்று பார்த்த நிலையில் மதன்குமார் தான் மறைத்து வைத்திருந்த மீன்வெட்ட பயன்படுத்தும் கத்தியை கொண்டு ரமணியின் கழுத்தில் குத்தினார். மேலும், அவரது வயிற்று பகுதியில் குத்தி விட்டு தப்பியோட முயன்றுள்ளார். இதனால் ரமணி அலறி துடிக்க, அந்த சத்தம் கேட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் சிலர் மதன்குமாரை விரட்டி பிடித்தனர்.

ரோந்து பணியில் இருந்த போலீசார்

இந்நிலையில், பள்ளியில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில், ரோந்து பணியில் இருந்த சேதுபாவாசத்திரம் போலீசார் சத்தம் கேட்டு ஓடிவந்து மதன்குமாரை பிடித்து கைது செய்தனர். இதற்கிடையில், ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிரியை ரமணியை மாணவர்கள், ஆசிரியர்கள் துாக்கிக்கொண்டு சாலைக்கு கொண்டு வந்து ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரமணி இறந்தார். இதையடுத்து அவரது உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை கொலை செய்யப்பட்ட தகவல் குறித்து அறிந்த பேராவூரணி தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமார் ஆசிரியர்களையும், மாணவர்களையும் சந்தித்து பேசினார். தொடர்ந்து கொலை செய்யப்பட்ட ரமணியின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி., ஜியாவுல் ஹக், மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

விசாரணை குறித்து டிஐஜி கூறிய தகவல்

பின்னர் டி.ஐ.ஜி., ஜியாவுல் ஹக் நிருபர்களிடம் கூறுகையில், ரோந்து பணியில் இருந்து சேதுபாவாசத்திரம் போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, அரைமணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்துள்ளார். இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. ஆசிரியர்கள் ஓய்வறையில் தான் கொலை நடந்துள்ளது. பள்ளியில் காவலாளி இல்லை. கதவு திறந்து உள்ளது. யாரையும் கேட்காமல், மதன்குமார் நேராக பள்ளியின் ஆசிரியர் ஓய்வறைக்கு சென்றுள்ளார் இவ்வாறு அவர் கூறினார்.

மனசு நிறைந்து காதலித்து இருந்தால் இப்படி கொடூரமாக பெண்ணை குத்தி கொலை செய்வானா. திருமணம் செய்து கொள்ள நினைத்தவன் என்ன காரணத்தால் மறுப்பு தெரிவித்தார்கள் என்று கேட்டு அதை திருத்திக் கொள்ளாமல் அநியாயமாக ஒரு பெண்ணின் உயிரை எடுத்து விட்டானே என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.