செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை தாமதப்படுத்தவே 2000க்கும் மேற்பட்டோரை, குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்த்திருக்கிறீர்களா என தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி:

போக்குவரத்து துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்ற விவகாரத்தில் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து விசாரிப்பதற்கு எதிராக ஒய். பாலாஜி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "இந்த விவகாரத்தில் பதியப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களாக 2000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அதிக அளவில் சாட்சிகள் உள்ளன. அப்படி இருக்கும்போது தனித்தனியாக விசாரிக்கும்போது கால விரயம் ஏற்படும்" என தெரிவித்தனர்.

இதற்கு, ஒய். பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், "இந்த வேலைக்கு பணம் கொடுத்த பலர் ஏழைகள், அவர்கள் தங்களின் தாய், பாட்டி உள்ளிட்டோரின் நகையை விற்றும், நகையை அடகு வைத்தும் பணம் கொடுத்துள்ளனர். எனவே, இந்த விவகாரதரதில் பிரதான குற்றம்சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி, அவரது சகோதரர், முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் தொடர்பாக வழக்கை தனியாக விசாரித்தால் விரைவில் தீர்வு கிடைக்கும்" என வாதிட்டார்.

விசாரணையை தாமதப்படுத்த இப்படி பண்றீங்களா?

இந்த கோரிக்கையினை நிராகரிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், "குற்றம்சாட்டப்பட்டவர் ஒரு அதிகார பலம் மிக்க அரசியல்வாதி. பொதுமக்களின் ஆதரவை பெற்ற ஒரு சக்திவாய்ந்த அரசியல்வாதியாக உள்ளார், அவ்வாறு அவர் இருப்பதில் தவறில்லை.

மேலும், அமைச்சர் பதவியை வகித்த ஒருவர் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் போது, அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மூலம் வழக்கை சந்திப்பது என்பது நீதியை நிலைநாட்ட முடியாது என்ற ஒரு பொதுக் கருத்து உள்ளது என்பது மட்டுமே எதிர் தரப்பினரின் கவலையாக உள்ளது.

எனவே முதலில் எத்தனை பேர் குற்றம்சாட்டப்பட்டு உள்ளனர். பணம் எவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்டது ஆகிய விவரங்கள் வேண்டும். வேலைக்கு பணம் பெற்ற வழக்கை எவ்வாறு நடத்தப் போகிறீர்கள் என்ற தெளிவான திட்டத்தை இந்த நீதிமன்றத்திடம் அளியுங்கள். மேலும், இந்த வழக்கு எவ்வளவு காலத்தில் விசாரணை செய்து முடிப்பீர்கள் என்பதையும் தெரிவியுங்கள்" எனக் கூறி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 5 கோட்டங்களில் 1630 பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில், நடத்துநர் பணிக்கு ரூ.1.75 லட்சம் தொடங்கி உதவிப் பொறியாளர் பணிக்கு ரூ.12 லட்சம் வரை செந்தில் பாலாஜி கையூட்டு வாங்கிக் குவித்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், செந்தில்பாலாஜி அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி, தம்மீது புகார் கொடுத்த அனைவருக்கும் பணத்தைக் கொடுத்து, புகார்களை திரும்பப் பெறச் செய்தார். இதை சென்னை உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு அவரை விடுதலை செய்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி மீது மீண்டும் வழக்கு தொடர்ந்து நடத்த வேண்டும் என்று ஆணையிட்டது.