இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) ஜனவரி 2026-ல் நடத்திய சி.ஏ பவுண்டேஷன் மற்றும் இன்டர்மீடியட் தேர்வு முடிவுகள் இன்று (மார்ச் 8) வெளியாகி உள்ளன. இம்முறை வெளியான முடிவுகளில், அகில இந்திய அளவிலான தரவரிசைப் பட்டியலில் மாணவிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.

மதுரை மாணவி சாதனை

சி.ஏ. பவுண்டேஷன் எனப்படும் அடிப்படை தேர்வில் மதுரையைச் சேர்ந்த லோகப்பிரியா என்ற மாணவி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் 400-க்கு 366 மதிப்பெண்கள் பெற்று, 91.5 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து மிட்னாபூரைச் சேர்ந்த குஷி சிகாரியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். பவுண்டேஷன் தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 19.23 சதவீதமாக உள்ளது.

இன்டர்மீடியட் தேர்வு விவரம்

இன்டர்மீடியட் தேர்வில், எல்லனாபாத்தைச் சேர்ந்த கன்ஹையா லால் (Kanhiya Lal) 600-க்கு 508 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். இருப்பினும், அடுத்தடுத்த இடங்களை மாணவிகளே தக்கவைத்துள்ளனர். பெரிந்தல் மன்னாவைச் சேர்ந்த பாத்திமா ஷெசா (Fathima Shehza) இரண்டாம் இடத்தையும், ஃபரிதாபாத்தைச் சேர்ந்த வன்யா பன்சால் மூன்றாம் இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர்.

தேர்ச்சி விகிதம்

2026 பவுண்டேஷன் தேர்வில் மொத்தம் 57,238 மாணவர்கள் கலந்து கொண்டனர், இவர்களில் 11,523 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், 52,456 மாணவிகள் தேர்வெழுதிய நிலையில், 9,576 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் 566 மையங்களில் இத்தேர்வுகள் நடைபெற்றன.

இதில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 20.13 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 18.26 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. பவுண்டேஷன் தேர்வின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 19.23 சதவீதமாகும்.

இன்டர்மீடியட் தேர்வு விவரம்

இன்டர்மீடியட் தேர்வைப் பொறுத்தவரை, குரூப் 1-ல் 1,05,526 பேர் தேர்வெழுதியதில் 14,733 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குரூப் 2-ல் 69,477 பேர் தேர்வெழுதியதில் 10,798 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு குரூப்களையும் (Both Groups) சேர்த்து 41,798 பேர் தேர்வெழுதிய நிலையில், அவர்களில் 3,924 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதன் அடிப்படையில், இன்டர்மீடியட் குரூப் 1-ல் 13.96 சதவீதத்தினரும், குரூப் 2-ல் 15.54 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு குரூப்களையும் சேர்த்து எழுதியவர்களில் 9.39 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் தரவரிசையில் இடம்பிடித்த மாணவிகளுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தேர்வு முடிவுகளை காண்பது எப்படி?

தேர்வு முடிவுகளை மாணவர்கள் icai.nic.in என்ற இணையதளத்தில் தங்கள் பதிவு எண் மற்றும் ரோல் நம்பரைப் பயன்படுத்தித் தெரிந்து கொள்ளலாம்.