திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சடலத்தின் அருகில் பேட்டரி, வயர்கள் மற்றும் டெட்டனேட்டர் ஆகியவை இருந்ததால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வனப்பகுதியில் காட்டு விலங்குகளை வேட்டையாட முயன்ற போது வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் வனத்துறையும் விசாரணை செய்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிறுமலை கிராமம். இங்கு செல்லும் வழியில் 18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட சிறுமலையில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. அடர்ந்த வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்கள் அமைந்துள்ளது. இங்கு பல அரிய வகை மரங்களும் உயிரினங்களும் உள்ளன. குறிப்பாக கேளையாடு, மான், முயல், முள்ளம்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட உயிரினங்களும் பல அரிய வகை பறவைகளும் உள்ளன.

இங்கு இருக்கக்கூடிய மக்கள் பெரும்பாலும் விவசாயமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சிறுமலையில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு வகையான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. துப்பாக்கிச் சூடு, சந்தன மரங்களை வெட்டி கடத்துவது, வனவிலங்கு வேட்டையாடுவது போன்ற அடுத்தடுத்த குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிறுமலை அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலத்திற்கு அருகில் பேட்டரி வயர்கள், டெட்டனேட்டர் ஆகியவை இருந்தது போலீசார் மற்றும் காவல் துறயினரை கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து சிறுமலை பகுதிக்கு செல்லும் மலைப்பாதையில் 17-வது கொண்டை ஊசி வளைவு அருகில் வனத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள வாட்சிங் டவர் உள்ளது.

இதன் அருகே துர்நாற்றம் வீசியதால் மலைச் சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கும் திண்டுக்கல் தாலுகா காவல்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் சிறுமலை வனத்துறையினர் சோதனை செய்ததில் அழுகிய நிலையில் ஆண் பிணம் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அப்பகுதி முழுவதும் ஆய்வு செய்ததில் இறந்தவரின் உடல் அருகே பேட்டரி வயர்கள் கிடந்துள்ளது.

இதனடிப்படையில் வெடிகுண்டு நிபுணர்கள், கியூப் பிரிவு போலீசார், மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர். சம்பவ இடத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் நேரடியாக ஆய்வு செய்தார். மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் டெட்டனேட்டர் பயன்படுத்தும் போது ஏற்பட்ட விபத்தில் நபர் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் இவர் கேரள மாநிலம் இடுக்கி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. எதற்காக இவர் கேரளாவிலிருந்து திண்டுக்கல் சிறுமலை பகுதிக்கு வந்தார். டெட்டனேட்டரை எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தினார் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில் சிறுமலையில் கடந்த சில நாட்களாக வனவிலங்கு வேட்டையும் அதிகரித்து இருக்கிறது என்ற புகாரும் உள்ளது. நாட்டு வெடிகளை வைத்து காட்டு பன்றிகள் உள்ளிட்டவற்றை வேட்டையாடுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நபர் டெட்டனேட்டரை வைத்து காட்டுப் பன்றியை வேட்டையாட முயன்றபோது விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணைக்கு பிறகே வனப்பகுதியில் என்ன நடந்தது என்று தெரியவரும் என்கின்றனர் காவல்துறையினர்.