விழுப்புரம்: வருமானம் இல்லாத கிராமத்தை தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றிய பட்டதாரி இளைஞர். கல்லூரி மாணவர் முதல் வெளி மாநில அரசு அதிகாரிகள் வரை களப்பயணம் மேற்கொள்ளும் கிராமம்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா பரையன்தாங்கல் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் முன்மாதிரி கிராமமாக உயர்த்த வேண்டுமென பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றியதன் காரணமாக மத்திய அரசு ஐஎஸ்ஓ தர சான்று அளித்து பாராட்டியுள்ளது.

இத்தகைய சிறப்பு பெற்ற கிராமத்தை பார்வையிட கல்லூரி மாணவர்கள், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிறுவனம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் தொடர்ந்து பரையன் தாங்கல் கிராமத்தை கள ஆய்வு செய்து கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு அதிகாரிகள் மட்டுமின்றி தற்போது தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிறுவனத்தை சேர்ந்த மண்டல அலுவலர்கள் 36 பேர் கொண்ட குழுவானது பரையன்தாங்கல் ஊராட்சியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

இக்குழுவில் உள்ளவர்கள் ஊரக வளர்ச்சி அதிகாரிகளாக உள்ள நிலையில் தமிழகத்தில் குறிப்பாக பரையன்தாங்கல் கிராமத்தில் முன்மாதிரி கிராமமாக உயர்த்தப்பட்ட காரணங்கள் குறித்து கள ஆய்வு செய்து இதற்கான மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து கேட்டறிந்தனர் இக்கள ஆய்வில் சாலை வசதி,குடிநீர் வசதி,ஊழலற்ற நிர்வாகம்,தூய்மையான கிராமம்,இதுவரையில் காவல்துறையில் எவ்வித வழக்கும் பதியப்படாத நிலை உள்ளிட்ட பல்வேறுமுன்மாதிரி திட்டங்களை கிராமத்தில் செயல்படுத்துவதால் கிராமத்தை தொடர்ச்சியாக தமிழக மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான அரசு அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது

இவ்வித வரி வசூலும் இன்றி அரசு திட்டங்களோடு இணைந்து தனது சொந்த செலவில் கிராமத்தை மேம்படுத்தி முன்மாதிரி கிராமமாக உயர்த்த வேண்டும் என உயர்ந்த லட்சிய கனவோடு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் எம்.பி.ஏ பட்டதாரியான ஏழுமலை முன்னெடுத்து வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.