சு.வெங்கடேசன் எம்.பி அறிக்கை.

"இந்த மாதம் 12ஆம் தேதி காலை 8.30 மணி தொடங்கி 13ஆம் தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் மதுரையில் 16 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியது. இந்த 16 செ.மீ. மழையில், குறிப்பாக, 12 ஆம் தேதி இரவு 10 மணி முதல் 13ஆம் தேதி அதிகாலை 3.30 மணி வரையிலான 5.30 மணிநேரத்தில் மட்டும் 13 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியது. புவி வெப்பமயமாதலால் உந்தப்பட்ட காலநிலை மாற்றத்தால் குறுகிய காலத்தில் அதிகப்படியான பெருமழை பொழியும் என அறிவியலாளர்கள் கூறிவருவதற்கான எடுத்துக்காட்டாகும் இந்த நிகழ்வு. இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தரவுகளின்படி, வடகிழக்குப் பருவமழை காலமான இந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையில் மதுரையில் மட்டும் பதிவான சராசரி மழையின் அளவு 163.4 மி.மீ. ஆகும். ஆனால், இதே காலத்தில் வழக்கமாகப் பதிவாகும் மழையின் அளவு 70.8 மி.மீ. மட்டுமே. ஆகவே, அக்டோபர் மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் மழைப்பொழிவு இயல்பைவிட 131% அதிகமாகப் பதிவாகியுள்ளது. வடகிழக்குப் பருவமழை காலத்தில் இயல்பைவிட அதிகமான மழைப்பொழிவு பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வுத்துறை ஏற்கெனவே தெரிவித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

நீரோட்டத்தை சீர்செய்ய வேண்டும்

மதுரையில் உள்ள குளங்கள் கால்வாய்களுக்கு நீர்வரத்து பெருகி உள்ளது. மழைநீர் செல்லும் கால்வாய் எங்கெல்லாம் நீரோட்டம் தேங்கியுள்ளது என்பதைக் கண்டறிந்து அவற்றை அப்புறப்படுத்துவதற்கு ஒரு நல்வாய்ப்பு இப்போது அமைந்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் இரவு பகல் பாராமல் குப்பைகள், அடைப்புகள் தேங்கியுள்ள பகுதிகளைக் கண்டறிந்து சரி செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக மதுரை மாநகர் பகுதிக்கு வருகின்ற 11 கால்வாய்கள் அவற்றில் குப்பைகளை கொட்டப்பட்டதால் ஏற்பட்டுள்ள மேடுகள் மற்றும் கால்வாய் பகுதியில் வளர்ந்துள்ள களைச்செடிகள், கால்வாய் ஓரத்தில் இருந்து கால்வாய் பகுதியில் விழும் மரக்கிளைகள் போன்றவைகளால் நீரோட்டம் தடைபடும் இடங்கள் அதிகமுள்ளன. மேலும் கால்வாய் பகுதியில் உள்ள பாலங்களின் தூண்கள் அடிப்பகுதியில் பல இடங்களில் குப்பைகள், மரக்கிளைகள் அடைத்துத் மழைநீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். குறிப்பாக பந்தல்குடி, சிந்தாமணி, அவனியாபுரம், கிருதுமால்நதி, கொண்டைமாரி ஓடை போன்ற வாய்க்கால்களின் நீரோட்டத்தை சீர்செய்ய கூடுதல் முக்கியத்துவத்தோடு பணிகளை துவக்கிட வேண்டும்.

மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்

திருப்பாலை சர்வேயர் காலனி வழியாக வரும் சாத்தையாறு ஓடை வெள்ளநீர் கடந்த காலங்களில் பெரும் பாதிப்புகளை உருவாக்கிய நிலையில் சாத்தையாறு ஓடையைச் சுத்தப்படுத்தும் பணிகளை உடனடியாக கவனிக்க வேண்டும். பெருமழையின் காரணமாக பெரியாறு பாசனப் பகுதியின் வடிநீர் மதுரை மாநகர வடக்குப் பகுதி வழியாக வைகை நதியில் சேர அனைத்து கால்வாய்களையும் இடர் அகற்றி வழிவகை செய்ய வேண்டும். வண்டியூர், மாடக்குளம் கண்மாய்களை கண்கானிக்கும் பணிகளில் வருவாய் மற்றும் பேரிடர் துறை, நீர்வளத்துறை, மாநகராட்சி மூன்றும் இணைந்து, தொடர்ந்து ஈடுபட வேண்டும். குறிப்பாகப் போக்குவரத்து காவல் துறையின் பணிகளை முக்கிய சந்திப்புகளில் முழுமையாக உறுதிப்படுத்த வேண்டும். கடந்த இரண்டு நாட்களில் பெய்த மழை தற்போது நின்றுள்ள நிலையில் இவற்றை சரிசெய்ய ஒரு நல்வாய்ப்பினை வானிலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அடுத்து நாம் எதிர்கொள்ளவுள்ள பெருமழையை பெறும் அச்சமின்றி, பாதிப்பின்றி சமாளிக்க இப்பணிகளை மேற்கொள்வது மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பேரிடர்களைத் தவிர்க்க தமிழ்நாடு அரசு சென்னையின் 15 மண்டலங்களுக்கும் 15 ஆட்சிப்பணி அதிகாரிகளை நியமித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதை வரவேற்கிறேன்.

நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

மதுரை மாநகராட்சிப் பகுதியில் அம்ருத் - குடிநீர் பணி, வடிகால், பாதாளச் சாக்கடை பணி மற்றும் சாலை பணிகள் இரண்டு முக்கிய மேம்பால பணிகள் நடந்து வருவதால் மதுரை மக்கள் கடும் இடர்பாடுகளைச் சந்துத்து வருகிறார்கள். அரசு நிர்வாகம் கூடுதலாகவும், கவனமாகவும், பணியாற்ற வேண்டிய இந்த காலத்தில் மாநகராட்சியின் முக்கியமான பணியிடமான இரண்டு துணை ஆணையர் பதவி நிரப்படாமல் இருக்கிறது. இவைகளை உடனே நிரப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். பருவமழை காலத்து இடர்களைப் போக்க அரசு நிர்வாகம் முழுமையாகவும், ஆற்றலோடும் செயல்பட அனைத்துவித முயற்சிகளையும் உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்".