தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இயங்கி வருகிறது அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பில் இருந்தபோது திடீரென்று வகுப்பறையில் இருந்த ரசாயன பாட்டில் உடைந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே வகுப்பறையில் இருந்த 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வரிசையாக மாணவிகள் மயக்கமடைந்து கீழே விழ தொடங்கினர். இதனால் மற்ற மாணவிகளும், ஆசிரியர்களும் பதட்டமடைந்தனர்.

உடனடியாக மற்ற ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் உதவியோடு மாணவிகளை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லேசாக மயக்கமடைந்த மாணவிகளின் முகத்தில் சக மாணவிகள் தண்ணீர் தெளித்து வெளியே காற்றோட்ட பகுதியில் அமர வைத்தனர். அதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதாக கூறி தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த செங்கோட்டை காவல்துறையினர் நேரில் பள்ளிக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மாணவி ஒருவர் அக்தர் என்ற சென்ட் பாட்டிலை இன்று பள்ளி வகுப்பறைக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த சென்ட் பாட்டிலானது வகுப்பறைக்குள் விழுந்து உடைந்த நிலையில், வகுப்பறையில் செண்ட் நறுமணமானது முழுவதுமாக பரவியுள்ளது. இந்த நிலையில், அந்த நறுமணமானது மிக அதிக அளவில் இருந்த நிலையில், ஒவ்வொரு மாணவிகளாக திடீரென மயக்கம் அடைந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

சென்ட் பாட்டில் உடைந்த நிலையில் நறுமணம் தாங்க முடியாமல் மாணவிகள் மயக்கமடைந்ததாக கூறப்படும் நிலையில் மாணவிகள் மயக்கத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வகுப்பறையில் இருந்த திரவ பாட்டில் உடைந்து வீரியமிக்க வாயு வெளிப்பட்டதால் மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.