லாட்டரி சீட்டு விற்பனையாளர்கள் மத்திய அரசுக்கு சேவை வரி செலுத்த வேண்டியதில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

லாட்டரி சீட்டு விற்பனையாளர்களுக்கு சேவை வரி விதிக்க அனுமதி கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் 2013ஆம் ஆண்டு மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில் வரி விதிக்க தங்களுக்கு உரிமை உள்ளது என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த மனு பற்றிய பல கட்ட வாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

அப்போது லாட்டரி சீட்டு விற்பனையாளர்களுக்கும் எந்தவித ஏஜென்சிகளுக்கும் தொடர்பு இல்லை எனவும் எனவே அவர்கள் சேவை வரி கட்ட தேவையில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆனால் அரசியல் சாசனத்தின் பட்டியல் 2ல் வகைப்படுத்தப்பட்டப்படி மாநில அரசு விதிக்கும் கேளிக்கை வரி செலுத்துவது தொடரும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

லாட்டரி சீட்டு விற்கும் நிறுவனம் மற்றும் லாட்டரி சீட்டு வாங்குபவர்களுக்கு இடையே நடக்கும் பரிமாற்றங்களுக்கு சேவை வரி விதிக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. வாதங்களின்படி, மத்திய அரசு விதிப்பதாக சொல்லும் சேவை வரி செலுத்தவதற்கான கோரிக்கைக்கு எந்தவித தகுதியும் இருப்பது போல் தெரியவில்லை என நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

எனவே மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்தனர்.

லாட்டரிகள் மீது மாநில அரசே வரி விதிக்க முடியும் எனவும் மத்திய அரசு சேவை வரி விதிக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் சிக்கிம் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை உறுதி செய்தது.