தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 25,199 விவசாயிகளிடமிருந்து 1,34,348 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ. 325 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக நெல் மற்றும் அரிசி சேமிப்பு கிடங்கு, சந்தானம் நெல் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றில் நெல்மூட்டைகள் பாதுகாப்புடன் சேமிக்கும் பணிகள் ரயில் தலைப்பு பகுதியில் ரயில் வேகன்கள் மூலம் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் நெல் விவசாயம் செய்துள்ள விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்யப்பட்ட நெல்லினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு நெல் கொள்முதல் பணிகளை துரிதப்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், தற்போது பெய்து வரும் மழையிலிருந்து நெல் மூட்டைகளை பாதுகாக்கும் வகையில் நெல் சேமிப்பு நிலையங்களின் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து தேவையான இடங்களில் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 01.09.2025 முதல் 14.10.2025 வரை தஞ்சாவூர் அலகில் 199 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் கும்பகோணம் அலகில் 51 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பட்டுக்கோட்டை 42 அலகில் நெல் கொள்முதல் நிலையங்கள் என மொத்தம் 292 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலமாக 41,798 மெ.டன் சன்னரக நெல்லும் 99,550 மெ.டன் பொது ரக நெல்லும் என மொத்தம் 134,348 மெ.டன் நெல் 25,199 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு அவர்களின் வங்கி கணக்கில் ரூ.324,98,84,452 வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் மொத்தம் 66,861 மெ.டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது விவசாயிகளால் கொண்டுவரப்படும் நெல்லினையும் போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்யவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை பாதுகாப்பான முறையில் சேமித்து வைத்து இயக்கம் செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக மேலாளர் (தரக்கட்டுப்பாடு) கார்த்திகைசாமி, உதவி மேலாளர் ரமேஷ்குமார், தர ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.